Tamilnadu

“கலைஞரை விட என் மீது அன்பு செலுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” : கண்ணீர் விட்டு உருகிய டி.ராஜேந்தர்!

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக இன்றைய தினம் அமெரிக்கா புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், “நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. என் முகத்தில் தான் தாடி வைத்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் எதையும் மூடி வைத்தது இல்லை. நான் இன்றுதான் அமெரிக்கா செல்கிறேன். அதற்கு முன்னதாகவே பல கதைகளை அடைத்து நான் அமெரிக்கா சென்று விட்டதாக குறிப்பிட்டார்கள். நானே ஒரு நடிகன் - இயக்குனர். எனக்கே கதை எழுதி திரையிட முயற்சிக்கின்றனர்.

விதியை மீறி எதுவும் நடக்காது, எனக்காக பிரார்த்தனை செய்த கட்சிக்காரர்கள், என் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் என்னுடைய விசுவாசிகளாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. என் உடல்நிலை சரியில்லாத போது நேரில் வந்து என்னை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், பச்சைமுத்து, மற்றும் கமலஹாசன், ஐசரி கணேசன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. ராமச்சந்திரா மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் என் மீது காட்டிய அன்பிற்கு அளவே இல்லை அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாவற்றையும் விட என் தாய் கழகம் தி.மு.க தலைவர் தற்போதைய முதல்வர், அன்பை காட்டி பாசம் காட்டி தோள் தட்டி என்னை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் இரண்டாவது முறையாகவும் குடும்பத்தினரோடு வந்து என்னை நேரில் சந்தித்து அன்பையும் ஆதரவையும் காட்டியபோது எனக்குத் தோன்றியது என் மீது அன்பு காட்டுவார் என்று கலைஞரை மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால், இப்போது “தலைவர் கலைஞரை மட்டுமே என் மீது அன்பு காட்டுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரை விட என் மீது அன்பு செலுத்துகிறார்.

நான் இன்று வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம் எனது மகன் சிலம்பரசன் தான். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் நான் ஒப்புக் கொண்டேன். அவனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு, தாய் தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில், என் மகன் பெற்றோர்களுக்காக கடின உழைப்பு செய்து வருகிறார். இப்படி ஒரு மகனை பெற்றதற்கும், குருவாக இருந்து ஒரு நல்ல சிஷியனை உருவாக்கியதற்கு நான் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “2 கோடி பேருக்கு வேலை என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு?” : மோடி அரசை கேள்வியால் துளைத்தெடுத்த பா.ஜ.க MP!