Tamilnadu
ஒருதலை காதலால் நடந்த விபரீதம்.. பள்ளி மாணவியை கத்தியால் குத்திவிட்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர் !
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருச்சி சாலையில் வசித்து வரும் 16 வயதான மாணவி தனியார் பள்ளி ஒன்றில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இறுதித் தேர்வை நேற்று எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி பின்னர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார்.
திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை கூறவே அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து உள்ளிட்ட 10 இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுதொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில் கத்தியால் குத்தியவர் பொத்தமேட்டுப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த கேசவன் (வயது 22) என்பதும், ஏற்கனவே அந்த மாணவியை கடத்திச் சென்றது தொடர்பாக மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு கேசவன் மற்றும் அவரது பெற்றோர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும், இந்த வழக்கு தற்போது திருச்சி மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதும் தெரியவந்தது.
இந்நிலையில் தான் இன்று மீண்டும் மாணவியை சந்தித்த கேசவன் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதையடுத்து அவரை போலிஸார் தேடி வந்தனர். அப்போது மாணவி கத்தியால் குத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழே பூசரிப்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடைப்பதாக வந்த தகவலை அடுத்து திருச்சி ரயில்வே போலிஸார் மற்றும் மணப்பாறை போலிஸார் நிகழ்விடத்திற்கு சென்று பார்த்த போது அங்கிருந்த மக்கள் இறந்தவர் கேசவன் என்பதை உறுதி செய்தனர்.
மேலும் இது தொடர்பாக கேசவனின் தந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர் வந்து பார்த்து விட்டு இறந்தவர் கேசவன் தான் என்பதை உறுதி செய்ததை அடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் திருச்சி ரயில்வே போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து கிடந்த கேசவனின் மொபைல் அவரது உடல் அருகே தண்டவாலத்திற்கு வெளியே கீழே வைக்கப்பட்டிருந்தது. அதனை கைப்பற்றிய போலிஸார் அதனை பார்த்தபோது அதில் கேசவனும், கத்தியால் குத்தப்பட்ட மாணவியும் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் ஆடியோயை ஸ்கிரீன் சேவரில் சேமித்து வைத்திருந்ததும், அதனை போலிஸார் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அதனை ஸ்கிரீன் சேவரில் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது.
மாணவியை கத்தியால் குத்திவிட்டு ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்