Tamilnadu

“கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவியதற்கு இதுதான் காரணம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?

சென்னை தேனாம்பேட்டை DMS வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார். மேலும் மருத்துவத்துறையில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகள் 20 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி ஆணையும் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100க்கும் கீழ் உள்ளது. உயிரிழப்பும் இல்லாத நிலை உள்ளது. வி.ஐ.டி கல்லூரியில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 4,192 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 45 பேருக்கு உறுதியாகியுள்ளது.

மேலும், ஐ.ஐ.டி-யில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குணமடைந்துள்ளனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் தொற்று பரவுவதற்குக் காரணம் இந்தியாவின் பிற மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வராமல் இருப்பதே ஆகும்.

எனவே, பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்கவும் கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 27 நபரிடம் 78 லட்சம் மோசடி.. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நடந்த அவலம்!