Tamilnadu

ரூ.250 கோடி.. 6 தளங்கள்.. ஒரே நேரத்தில் 2,200 வாகனங்களை நிறுத்த அதிநவீன காா் பாா்க்கிங் - எங்கு தெரியுமா?

சென்னை விமானநிலையத்திற்குள் வாகன போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக, ரூ.250 கோடியில் 6 தளங்களுடன், ஒரே நேரத்தில் 2,200 வாகனங்கள் நிறுத்துவதற்கான, அடுக்குமாடி அதிநவீன காா் பாா்க்கிங் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து, வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.

ஜுன் இரண்டாவது வாரத்திலிருந்து சோதனை அடிப்படையில், வாகனங்கள் அடுக்குமாடி காா் பாா்க்கிங்கில் அனுமதிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டரில், 250 கோடி ரூபாய் மதிப்பில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டும் பணி, 2018 ல் துவங்கியது. இந்த அடுக்குமாடி காா் பாா்க்கிங் 6 அடுக்குகள் கொண்டது. இந்த வளாகத்தில் ஒரே நேரத்தில் 2,200க்கும் அதிகமான கார்கள் வரை நிறுத்த முடியும். அதோடு காா்கள் வந்து திரும்பும்போது, போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாத வகையில் பல்வேறு நவீன வசதிகளுடையது.

கொரோனா வைரஸ் பாதிப்பு, அதோடு தொடா்ச்சியாக ஊரடங்கு, கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு உட்பட பல்வேறு காரணங்களால் இப்ணிகள் காலதாமதமாக நடந்து வந்தது. இந்த அடுக்குமாடி காா் பாா்க்கிங்க் கட்டடத்திலிருந்து, விமான நிலையத்திற்கு பயணிகள் நடந்து செல்லும் வகையில், இணைப்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் மீது, மேற்கூரை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதோடு வாகனங்கள் செல்வதற்கான இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, “அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன 6 அடுக்குமாடி வாகன நிறுத்தம் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது. வளகாத்திற்குள் வாகனங்கள் செல்லும் வகையில், சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பயணியர் நடந்து செல்வதற்கு வசதியாக, இந்த மேம்லாபத்தின் மீது, நீள்வட்ட வடிவில், மேற்கூரைகள் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இதுவரை 99 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மீதம் உள்ள பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து பணிகளும் முடிந்ததும், விரைவில் அடுக்கு மாடி வாகனம் நிறுத்தம் திறக்கப்படும். இந்த அதிநவீன காா் பாா்க்கிங்கில் ஒரே நேரத்தில் 2,200 வாகனங்கள் நிறுத்த முடியும். ஜுன் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து சோதனை அடிப்படையில் இந்த அடுக்குமாடி பாா்க்கிங்கிற்குள் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “விமான நிலைய வளாகத்திற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர்” : பயணிகளை நடுங்க வைத்த பகீர் சம்பவம்!