Tamilnadu
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி : முதலில் கலைஞர்.. 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.5.2022) நீலகிரி மாவட்டம், வெலிங்டன், இராணுவ தலைமை பயிற்சிக் கல்லூரிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்திய இராணுவம், கடற்படை, விமானப் படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளிலிருந்து வரும் இராணுவ அதிகாரிகளுக்கு உயர் இராணுவ கல்வி இக்கல்லூரியில் வழங்கப்படுகிறது. நாட்டின் முதன்மையான முப்படை சேவைகள் பயிற்சி நிறுவனங்களில், வெலிங்டனில் அமைந்துள்ள இக்கல்லூரி மிகவும் பழமையானது.
இந்திய பாதுகாப்பு துறையின் உயர் அலுவலர்கள் பயிற்சி பெறும் வெலிங்டன் இராணுவ தலைமை பயிற்சி கல்லூரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருவது இது இரண்டாவது முறையாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இக்கல்லூரிக்கு வருகை தந்திருக்கிறார். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை புரிந்துள்ளார்.
லெப்டினன்ட் ஜென்ரல் எஸ்.மோகன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பயிற்சி கல்லூரியின் இராணுவ உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்தி, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், கடந்த 75 ஆண்டு காலமாக நீலகிரிக்கும் வெலிங்டன் இராணுவ தலைமை பயிற்சிக் கல்லூரிக்கும் இடையே உள்ள உறவு குறித்தும் விளக்கினார்.
இச்சந்திப்பின்போது, நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் 12 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்வில், உடனடியாக நேரில் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதையும், தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கியதையும் நினைவுகூர்ந்து லெப்டினன்ட் ஜென்ரல் எஸ்.மோகன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், முதலமைச்சர் பயிற்சி கல்லூரி இராணுவ உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
உலகப் புகழ்பெற்ற இராணுவ பயிற்சி மையமாகத் திகழும் இக்கல்லூரி தமிழகத்தில் அமைந்துள்ளது மிகவும் பெருமைக்குரியதாகும் என்று முதலமைச்சர் தெரிவித்ததுடன், இராணுவ பயிற்சியில் அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாராட்டினார். இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் தொடர வேண்டும் என்றும், நாட்டிற்கு இக்கல்லூரி மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு இக்கல்லூரியின் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்திடும் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பயிற்சி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையெழுத்திட்டார்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!