Tamilnadu
“கல்வித்தான் உண்மையான சொத்து.. அதை யாரும் பிரிக்க முடியாது” : பட்டமளிப்பு விழாவில் முதல்வர் நெகிழ்ச்சி!
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று (16.5.2022) நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஆற்றிய விழாப் பேருரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”கையில் பட்டத்துடனும் - கண்களில் கனவுகளுடனும் - எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கக்கூடிய மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்களது திறமைக்கும் - அறிவுக்கும் - ஆற்றலுக்கும் தகுந்த எதிர்கால வாழ்க்கை நிச்சயமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. உங்கள் பெயரோடு இனி சேர இருக்கும் பட்டம் என்பது - இந்த சமூகத்தில் உங்களை அடையாளம் காட்டும் அறிவு அடையாளம். இந்த பட்டத்தோடு உங்களுடைய பட்டப் படிப்பு முடியப் போவதில்லை. அடுத்தடுத்த உயர்வுக்கு இது ஒரு அடித்தளம், அவ்வளவுதான். எந்த மனிதரின் சிந்தனைக்கும் அவரது மரணத்தில்தான் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அது போலத்தான் படிப்பும் - இறுதிவரை தொடர வேண்டும்.
பட்டம் பெறும் உங்கள் அனைவர் முகத்திலும் பூரிப்பும் பெருமிதமும் தெரிகிறது. அதைவிட உங்கள் அனைவருக்கும் இன்னொரு பெரிய பெருமை இருக்கிறது. 'கற்பதன் மூலமாகத்தான் ஒருவரது உள்ளார்ந்த திறமைகள் வளர்கின்றன' என்பதை நோக்கமாகக் கொண்டது இந்தப் பல்கலைக்கழகம். இங்கிருந்து படித்துப் பட்டம் பெற்றவர்கள் உலகப் புகழ் பெற்றவர்களாக வளர்ந்துள்ளார்கள் என்பதை உயர்கல்வித் துறை அமைச்சர் ஒரு நீண்ட பட்டியலை இங்கே வெளியிட்டிருக்கிறார்கள். கல்வியாளர்கள் - அறிவியலாளர்கள் - மேதைகள் - தொழிலதிபர்கள் - பேராசிரியர்கள் - அரசியல் தலைவர்கள் என வளர்ந்து வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் மட்டுமல்ல - உலகத்தின் பல்வேறு வளர்ச்சிக்குக் காரணமானவர்களை உருவாக்கிய இடம்தான் இந்தச் சென்னைப் பல்கலைக்கழகம். அத்தகைய திறமைசாலிகளின் வரிசையில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று நான் மனதார, உளமாற வாழ்த்துகிறேன், இடம்பெறச் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
தமிழ்நாட்டு மாணவ, மாணவியர் கல்வியில், சிந்தனையில், அறிவாற்றலில் மேன்மை பெற்றவர்களாக வளர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. தமிழக அரசின் மிகமிக முக்கியமான இலக்காக இது அமைந்திருக்கிறது. அதற்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
தமிழக மக்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கக்கூடிய நான் - அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வன் ஆக்க உருவாக்கிய திட்டம்தான் இந்த அற்புதமான திட்டம். அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில், செயலில், திறமையில் சிறந்தவர்களாக மாற்றவே இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால் - 'வேலைகள் இருக்கின்றன, ஆனால் அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை' என்று சொல்கிறார்கள். அப்படியானால் இளைஞர்களுக்கு அனைத்துத் தகுதிகளையும் உருவாக்க வேண்டிய கடமையானது இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தக் கடமையைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. அதில் வெற்றி காண வேண்டும் என்று நினைக்கிறது.
மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள், கல்வி நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித்தொகைகளின் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதில் பெறும் வகையில், ’நான் முதல்வன்’என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது.
வசதி படைத்தவர்கள் - பணம் செலுத்தி தனியார் நிறுவனங்களின் மூலமாக பயிற்சிகள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஏழை எளிய, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களால் அது இயலாது. எனவே அந்த வாய்ப்பை அரசுதான் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். அந்தக் கடமையைப் பல்வேறு வகையில் செயல்படுத்துவதற்காகத்தான் ஏராளமான திட்டங்களை நமது அரசு தீட்டி இருக்கிறது.
வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக் கூடாது. தகுதியான இளைஞர்கள் வேலைக்குக் கிடைக்கவில்லை என்று நிறுவனங்களும் சொல்லக் கூடாது. அத்தகைய நிலையைத் தமிழ்நாடு அரசு உருவாக்க நினைக்கிறது. அதற்காகத் தான் பல திட்டங்களைத் தீட்டி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
அதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் திட்டங்களைத் தீட்டிட வேண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். பெண்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்" என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் சேர்ந்து, படிப்பு முடியும் வரை, மாணவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதம் ரூபாய் 1000/- செலுத்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம், கல்வி உதவித்தொகை, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை, நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும், மாணவர்களுடைய நலன்கருதி தொடர்ந்து வழங்கி வரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது உங்கள் அரசு, இது மக்களுக்கான அரசு, இது மாணவர்களுக்கான அரசு என்று சொல்லிக்கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். சென்னைப் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பான முயற்சிகளை எடுத்து வருவதைப் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
• முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், 2006 ஆம் ஆண்டில் திராவிட இயக்க ஆராய்ச்சி மையத்திற்கான விதை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இடப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு இப்போது மீண்டும் புத்துயிர் ஊட்டப்பட்டிருக்கிறது.
• சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டினைச் சமர்ப்பிக்கும்போது, ஆய்வாளர்கள் தம் ஆய்வு தொடர்பான பத்துப் பக்கங்கள் அடங்கிய ஆய்வுச்சுருக்கத்தைத் தமிழில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை நான் மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். பல்துறை சார்ந்த ஆய்வுக்கருத்துக்கள் தமிழில் இவ்வாறு மொழியாக்கம் செய்யப்படுவது தமிழ்மொழியின் வளத்திற்கும், அதனுடைய பெருமைக்கும் பெரும் துணையாகும்.
• அரிய புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை மின்மயம் ஆக்குவதற்காகச் சென்னைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
• மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனம், இத்தாலி நேபிள்ஸ் பல்கலைக்கழகம், மெல்போர்ன் பல்கலைக்கழகம், பெருங்குடி ICT அகாடமி, ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய மகாத்மா காந்தி தேசிய கிராமக் கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு அறிவுசார் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையொப்பமிடப்பட்டுள்ளன என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
• முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வரும் ஏழை மாணவர்கள், கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள், பெற்றோரை இழந்த பிள்ளைகள். கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் கைம்பெண்களின் பிள்ளைகள் இலவசமாக இளநிலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறக்கூடிய வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ஆம் ஆண்டு முதல் "சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டம்" என்கிற சிறப்புமிகு திட்டத்தைச் செயல்படுத்தி வருவதை நான் மனதாரப் பாரட்டுகிறேன்.
திருநங்கைகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி கொண்டிருக்கக்கூடிய அனைத்துக் கல்லூரிகளிலும், வரும் கல்வியாண்டு முதல், இளநிலை மற்றும் முதுநிலையில் இலவசமான படிப்பு வழங்கப்படும் என்கிற திட்டம், எல்லாவற்றையும் விட எனக்கு உண்மையில் மனமார்ந்த மகிழ்வைத் தந்து கொண்டிருக்கிறது.
• அனைவருக்கும் சமமான சமூகநீதி என்ற தமிழ்நாடு அரசின் உயரிய திராவிட நோக்கத்தை, உயர்கல்வியில் நிறைவு செய்யும் பொருட்டு, சென்னைப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில், 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், இளநிலை பயிலும் மாணவர்களுக்குச் "சமூகநீதி" மற்றும் "திருக்குறள் காட்டும் தொழில்நெறி" ஆகிய பாடங்கள் விருப்பப் பாடங்களாக இடம்பெற இருப்பதைப் பாராட்டி நான் மகிழ்கிறேன்.பட்டங்களைத் தாண்டிய சமூக அறிவையும் நீங்கள் அனைவரும் பெற இது நிச்சயமாக உதவும்.
"ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்" - என்ற வள்ளுவரின் வரிகளை மனதில் வைத்து உட்கார்ந்திருக்கக்கூடிய பெற்றோர்கள், உங்கள் பிள்ளைகளை பட்டம் பெற்றவர்களாக நீங்கள் ஆக்கிவிட்டீர்கள்.
அவர்கள் உங்களது எண்ணங்களை வருங்காலத்தில் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள். உண்மையில் உங்களது பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் உண்மையான சொத்து, இந்தக் கல்வி எனும் சொத்துதான். இதைத்தான் யாரிடமிருந்தும் யாரும் பிரிக்க முடியாது.
ஆகவேதான் பெருந்தலைவர் காமராசர் காலம், பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்பதைப் போல - முத்தமிழறிஞர் கலைஞரின் காலம் கல்லூரியின் காலம் பொற்காலம் என்பதைப் போல - எனது தலைமையிலான ஆட்சியின் காலம், உயர்கல்வியின் பொற்காலம் ஆகவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு உதவியாக இருந்துகொண்டிருக்கக்கூடிய தமிழக ஆளுநர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உயர்கல்வி நிறுவன வரிசையில் சென்னைப் பல்கலைக்கழகம் முதன்மையான இடத்திற்கு வருவதற்கு எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து செயல்படும் இணை வேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள், துணைவேந்தர், பதிவாளர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள், பேராசிரியப் பெருந்தகைகள், மாணவர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பட்டம் பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு மீண்டும் என்னுடைய அன்பான வாழ்த்துகள்!
மேலும் மேலும் உயர்வினை அடைந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும், இந்த மாநிலத்திற்கும், நாட்டிற்கும் நீங்கள் தொண்டாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!