Tamilnadu

“மேல்மருவத்தூரில் காணாமல் போன கனடா நாட்டவர் பலி” : உயிரிழப்புக்கு என்ன காரணம்? - துப்பு துலக்கும் போலிஸ்!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கடந்த 13ஆம் தேதி ஸ்ரீலங்காவை பூர்வீகமாக கொண்டு கனடாவில் வசித்து வந்த லீலாவதி, அவரது மகள் யாழினி மற்றும் மகன் மகிந்தன் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்நிலையில் கோவிலில் சாமி கும்பிட்டு இருந்தபோது திடீரென மகிந்தனை காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் லீலாவதி மற்றும் மகள் யாழினி ஆகியோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். மகிந்தன் குறித்து எந்த தகவலும் இல்லாததால் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியில் சாலையோரமாக மயங்கிக் கிடந்த நபரை மீட்ட அப்பகுதியினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உடல் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனிடையே இறந்து போன நபர் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், உயிரிழந்த நபர் மகிந்தனாக இருக்கலாம் என்கிற கோணத்தில் லீலாவதியை அழைத்து வந்து உடலை காட்டினர்.

இறந்து போனது தனது மகன் மகிந்தன் என லீலாவதி உறுதி செய்தார்‌. தொடர்ந்து உடல்கூராய்வு செய்யப்பட்டு மகிந்தனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட தாய் லீலாவதி மற்றும் சகோதரி யாழினி விமானம் மூலம் கனடாவிற்கு உடலை எடுத்துச் சென்றனர். மேலும் மகிந்தன் மேல்மருவத்தூர் கோவிலில் இருந்து 40-கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூருக்கு எதற்கு வந்தார்? எப்படி வந்தார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “சிகரெட் வடிவிலும், ஊசி சிரஞ்சிலும் சாக்லேட் நிரப்பி விற்பனை” : அதிகாரிகள் ரெய்டு; ஆடிப்போன உரிமையாளர் !