Tamilnadu

“காரை எடுத்துக்கோங்க.. ஆனா கமலாலயம் போயிடாதீங்க..!” : எடப்பாடி பழனிசாமியை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

“காரை எடுத்துக்கோங்க... ஆனா கமலாலயம் போயிறாதீங்க..!”: என எதிர்க்கட்சித் தலைவரைக் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாகப் பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையின் நுழைவாயில் எண் 4 பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது கார்கள் நிறுத்தப்படுவது வழக்கம். கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முற்பட்டார். இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கேள்வி - பதில் நேரத்தில் பேசிய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், “இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களில் நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயரெடுத்து திராவிட மாடல் ஆட்சியை அமைத்து வரும் முதலமைச்சருக்கு நன்றி. எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி.

கடந்த முறை பேசும்போது வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இப்போது பேசுகையில் அவையில் இருப்பதற்கு நன்றி. அப்படி வெளிநடப்பு செய்து சென்றாலும், என்னுடைய காரில்தான் தவறுதலாக ஏறுகிறீர்கள்.

நானும் 3 நாட்களுக்கு முன்பு உங்கள் காரில் தவறுதலாக ஏறிச்செல்ல பார்த்தேன். காரின் முகப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் இருப்பதை பார்த்து சுதாரித்துக் கொண்டேன்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆனால் எனது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள்” என்றார்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “என் தொகுதியில் தெருத்தெருவாக வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்தி கோரிக்கையை கேட்டறிந்தோம். ஆற்காடு இளவரசர் இல்லமாக இருந்தாலும் சரி, குடிசை மாற்றுவாரிய குடியிருப்பாக இருந்தாலும் சரி.. அங்கெல்லாம் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டோம்.

பயிற்சிப் பட்டறையாகவே சட்டமன்ற தொகுதி பணிகளை பார்க்கிறேன். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வார் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பியதே, தி.மு.க ஆட்சி அமைத்தற்கு முக்கிய காரணம்.” எனப் பேசினார்.

Also Read: "உதயநிதி எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும்” : பேரவையில் உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!