தமிழ்நாடு

"உதயநிதி எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும்” : பேரவையில் உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

"உதயநிதி எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும்” : பேரவையில் உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் ஆணையராக மாற்றுத்திறனாளியை நியமிக்க வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகள் அனைவருக்கும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேரவையில் கோரிக்கை வைத்தார்.

‘மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்து, அவற்றைப் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றுவோம்’ என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,"சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய சகோதரி கீதா ஜீவன் அவர்கள் நிறைவாக பதிலுரை ஆற்றவிருக்கிறார்கள். ஆனால், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த மானியக் கோரிக்கையில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையும் இதில் இணைந்திருக்கின்ற காரணத்தால், நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தபோது அந்தத் துறையை தன் கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதே வழியில் நின்று, இன்றைக்கு நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

இங்கே அ.தி.மு.க.-வைச் சார்ந்த உறுப்பினர் அருண்குமார் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர் உதயநிதி அவர்களும் மாற்றுத் திறனாளிகள் குறித்துப் பேசி, அதையொட்டி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நான் நிச்சயமாக, உறுதியாக படிப்படியாக நிறைவேற்றுவேன். மாற்றுத் திறனாளிகளுக்கென்று அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆணையரகத்திற்கு நானே நேரடியாகச் சென்று, சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அமைப்புகளுடைய நிர்வாகிகளை அழைத்து, இதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன; என்னென்ன பிரச்சினைகளையெல்லாம் நாங்கள் தீர்த்து வைத்திருக்கின்றோம்; அதனால் நீங்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் என்ன; இன்னும் மீண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பதற்காக மிக விரைவிலே ஒரு பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, நிச்சயமாக அதற்குரிய பரிகாரத்தை இந்த அரசு காணும்; படிப்படியாக அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதை இங்கு பேசிய உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் இதை ஓர் அறிவிப்பாகவே நான் தெரிவிக்கிறேன்” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories