Tamilnadu

பேருந்து நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வீச்சு... மர்ம நபர்களை மடக்கிப் பிடித்த நெல்லை போலிஸ்!

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கின. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் திறப்பு விழா கண்ட பின்னும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் அதிக வாடகை பிரச்சினை காரணமாக முழுமையாக திறக்கப்படவில்லை. இதனால் வழக்கமான பரபரப்பு இன்றி மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் ஒரு பழ ஜூஸ் கடைக்கு அருகில் மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதாலும், பேருந்துகள் இயக்கமும், மக்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் வெடிகுண்டு வெடித்ததில் யாருக்கும் காயமும் இல்லை, பேருந்து நிலையத்திலும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

இருந்தும் நாட்டு வெடிகுண்டு வீசிய நபர் யார் ? எங்கு தயாரித்தார் ? இதனை வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்த்த தயாரித்து சோதனை செய்தார்களா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக கிருஷ்ணன் மற்றும் சுடலை என இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Also Read: உலக பாரம்பரிய தினம் : தமிழர்கள் கொண்டாடும் யுனெஸ்கோ அங்கீகரித்த ‘ஊட்டி மலை ரயில்’ பற்றி தெரியுமா?