Tamilnadu

’தப்பு பண்ணிட்டியே சிங்காரம்’.. செல்போன் திருடனை விரட்டிப் பிடித்த தடகள வீராங்கனைகள் : கமிஷனர் பாராட்டு!

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபலட்சுமி மற்றும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் காயத்ரி இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் முதலமாண்டு படித்து வருகின்றனர். மேலும் இரண்டு பேரும் தடகள வீராங்கனைகள் ஆவார்கள்.

இந்நிலையில், மாணவிகள் இருவரும் தடகள பயிற்சிக்காக கடந்த 8ம் தேதி பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் இருந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் இவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

திடீரென அந்த வாலிபர், காயத்ரியின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அந்த நபரை பின்தொடர்ந்து ஓடினர். மேலும் ’திருடன், திருடன்’ என கத்திக் கொண்டே ஓடினர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும்போது மடக்கிப் பிடித்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த போலிஸார் அந்த நபரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அந்த வாலிபர் கார்த்தி என்பதும், இவர் தப்பிச் செல்ல இருசக்கர வாகனத்தில் காத்திருந்தவர் சூர்யா என்பதும் தெரியவந்தது. பிறகு இவரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறிந்து அறிந்த சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கல்லூரி மாணவிகள் இருவரையும் தனது அலுவலகத்திற்கு அழைத்து அவர்களின் துணிச்சலை வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த மாணவிகளுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: ஷோரூமில் சார்ஜ் செய்தபோது வெடித்து சிதறிய பேட்டரி.. 17 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம் !