Tamilnadu

ஆக்கிரமிப்பு இடங்களை காலி செய்து அரசாங்க கட்டிடங்கள் கட்டப்படும்: பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதன்படி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலுரையில், சென்னையைச் சுற்றியிருக்கின்ற 4 மாவட்டங்களில், இதேபோல போலி பட்டாக்கள், சம்பந்தமில்லாத பத்திரங்கள் எல்லாம் நீண்ட நெடிய காலமாக இருக்கிறது. எனவே எந்தெந்த இடங்களில் இதுபோன்ற நிலை என்பது குறித்து உறுப்பினர்கள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

உதாரணமாக, ஜேப்பியார் கல்லூரியில் ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறியவுடன் அங்கிருந்த 92 ஏக்கர் நிலம் உடனடியாக மீட்கப்பட்டது. இந்த நிலம் அரசின் உபயோகத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது. எந்தெந்த துறைக்கு இடம் தேவைப்படுகிறது என்பது குறித்து கேட்டுள்ளோம். நிலத்தை அந்தந்த துறைகளுக்கு நாங்கள் ஒதுக்கி தரப்போகிறோம்.

எனவே இந்த இடத்தைப் போன்று முழுமையாக பெரிய இடங்களாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பில் உள்ள சிறிய இடங்களை எல்லாம், அந்த இடத்தில் அரசாங்கத்துக்கு கட்டிடம் கட்டப்படும் தேவை ஏற்படும் நேரத்தில், அந்த இடங்களை காலி செய்து அரசாங்க கட்டிடங்கள் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 1 மணி நேரத்தில் மதுரை to சென்னை.. பறந்து வந்த கல்லீரல்: உடனடி அறுவை சிகிச்சை- அசத்திய அரசு மருத்துவர்கள்!