Tamilnadu

6 ஆண்டுக்கு பிறகு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.. பட்ஜெட்டில் இடம் பெற்ற 5 முக்கிய அறிவிப்புகள்!

சென்னையில் 2016ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை வெளியிட்டு வந்தனர்.

தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்ததை அடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆர். பிரியா மேயராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டிற்காக பட்ஜெட்டை நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன் இன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்:-

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நாப்கின்கள் வழங்குதல் மற்றும் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த ரூ.23.66 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணையதள இணைப்பு வசதி வழங்கப்படும்.

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் ரூ.5.47 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ரூ.6.91 கோடியில் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்து மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

1-8ம் வகுப்பு வரை பயிலும் 72 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.7.50 கோடியில் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும்.

சொத்து வரியை பொதுமக்கள் எளிதாக செலுத்த QR குறியீடு வசதி அறிமுகம் செய்யப்படும்.

சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த ரூ.4.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 3 டயாலிசிஸ் மையங்கள் ரூ.3.5 கோடி மதிப்பில் தொடங்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் 3 புதிய வீடற்றோருக்கான காப்பகங்கள் ரூ.2.40 கோடி மதிப்பில் கட்டப்படும்.

Also Read: “பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக நீட்டை தமிழ்நாட்டிற்குள் நுழையவிட்டார்கள்”: முதல்வர் பேச்சு!