Tamilnadu

10 லட்சத்துக்காக கடத்தப்பட்ட பள்ளி மாணவி மூன்றே மணிநேரத்தில் மீட்பு: சென்னை போலிஸ் அதிரடி.. நடந்தது என்ன?

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மீரா லெப்பை, இவரது மகள் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

வழக்கமாக பள்ளிக்கு வேனில் சென்று வீடு திரும்பும் மாணவி நேற்று வேனில் ஏறாததால் சந்தேகமடைந்த வேன் ஓட்டுநர் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதேச்சமயம் பெற்றோரின் அலைபேசிக்கு வந்த அழைப்பு ஒன்று மாணவியை கடத்தி விட்டதாகவும் 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே மாணவியை விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் ரவி தலைமையிலான தனிப்படை தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர்.

Also Read: காதலுக்கு இடையூறு.. சேமியா உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!

அதன்படி, 3 மணி நேரத்தில் மாணவியை கடத்திய, ராயப்பேட்டையைச் சேர்ந்த மொஹசினா பர்ஹீன், அவருக்கு உதவிய கோடம்பாக்கத்தை சேர்ந்த இஜாஸ் அஹமத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மொஹசினா பர்ஹீன், பணத்திற்காக கடத்த திட்டமிட்டு, அவ்வழியாக சென்ற போது தனிமையில் இருந்த மாணவியுடன் பெற்றோரின் நண்பர் என்று கூறி ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார்.

கடத்திய பிறகு மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு பத்து லட்ச ரூபாய் கேட்டு, பேரமும் பேசியுள்ளார். அதன்பின் பணத்தை வடபழனியில் கடையொன்றில் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சி மற்றும் கிடைத்த தகவலின் அடிப்படையில் வடபழனி அருகே மாணவியை பத்திரமாக மீட்டதோடு கடத்தலில் ஈடுபட்ட பெண் மற்றும் அவருக்கு உதவிய நபர் என இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புகார் கொடுத்த மூன்று மணி நேரத்தில் மாணவியை பத்திரமாக மீட்ட காவல்துறையினருக்கு பெற்றோர் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Also Read: நட்புக்கு ஆண் - பெண் பேதம் தெரியாது.. தோழனை தோளில் சுமக்கும் தோழிகள்: வைரல் வீடியோவில் இருப்பவர்கள் யார்?