Tamilnadu
நோயாளியுடன் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்: ஓட்டுநரின் செயலால் உயிரிழப்பு தவிர்ப்பு!
நோயாளியுடன் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர். தீ விபத்து குறித்து காவல்துறை விசாரணை.
சென்னை கீழ்ப்பாக்கம் லாக் தெருவைச் சேர்ந்தவர் 78 வயது முதியவர் நடராஜன். இவர் முடக்க நோய் சிகிச்சைக்காக ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டி இருந்தது. இதற்காக அங்கு செல்வதற்கு தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை பதிவு செய்து நேற்றிரவு வரவழைக்கப்பட்டிருக்கிறது.
நடராஜனை அவரது மருமகனான தலைமைக் காவலர் சதீஷ் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றார். கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் வந்தபோது ஆம்புலன்ஸ் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியிருக்கிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராபின் துரிதமாக செயல்பட்டு உள்ளே இருந்த நடராஜன், அவரது மனைவி, மருமகனான தலைமைக் காவலர் சதீஷ் ஆகியோரை கீழே இறங்க செய்திருக்கிறார்.
பின்னர், தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஓட்டுநர் ராபின் தகவல் கொடுத்தார். ஆனால், அதற்குள் ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அப்போது வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனிடையே தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !