Tamilnadu

₹ 2.60 லட்சத்திற்கு 1 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து பைக் வாங்கிய இளைஞர் : என்ன காரணம் தெரியுமா?

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. பட்டதாரி இளைஞரான இவர் தனது பெயரிலேயே ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறோர். மேலும் Boo Tech என்ற மற்றொரு யூடியூப் சேனலில் தொழில்நுட்பங்கள் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மக்களிடம் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமான வீடியோ ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளார். மேலும் இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதையே ஒரு வீடியோவாக மாற்ற நினைத்துள்ளார்.

இதையடுத்து தனது யூடியூப் சேனல் மூலம் கிடைத்த சேமிப்பு பணத்தை கொண்டு ரூ.2.60 லட்சம் மதிப்பில் பைக் வாங்கியுள்ளார். இதை வீடியோவாகவும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் ரூ.2.60 லட்சம் ரூபாய்க்கு வெறும் ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்துள்ளது பைக் வாங்கியதுதான்.

இதற்காகச் சில்லறை நாணயங்களை முதலில் பூபதி சேமித்து வந்துள்ளார். ரூ.10 ஆயிரம் வரை சில்லறை நாணயங்களை சேமிக்க முடிந்துள்ளது. இதையடுத்து ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் பழனி உள்ளிட்ட பெரிய கோவில்களில் கொடுத்து அதை சில்லறையாக மாற்றியுள்ளார்.

இந்த சில்லறைப் பணத்தை கொண்டு, ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே ரூ.2.60 லட்சத்திற்குச் சேமித்து பைக் வாங்கியுள்ளார். இப்படி கிட்டத்திட்ட 2 வருடங்கள் வரை சில்லறை நாணயங்களை சேமித்து வந்துள்ளார். பின்னர் பைக் வாங்குவதற்கு தேவையான பணம் கிடைத்தை அடுத்து பைக் ஷோரூமில் ரூ.2.60 லட்சத்திற்கு சில்லறை நாணயங்களை கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்து ஊழியர்கள் ஆச்சரியப்பட்டு, முதலில் பணத்தை வாங்க மறுத்துள்ளனர். பின்னர், இந்த அனைத்து நாணயங்களும் தனக்குச் சொந்தமானது என கூறிய பிறகே பூபதிக்கு பைக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை இளைஞர் பூபதி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: புகைப்பட கலைக்கான ஆஸ்கர் விருது.. WPPh சர்வதேச விருதைப் பெறும் முதல் தமிழர் : யார் இந்த செந்தில் குமரன்?