Tamilnadu

சமூக வலைதளங்களில் அவதூறு.. மீரா மிதுனுக்கு ஏப்.,6 வரை ஜெயில் - உத்தரவு பிறப்பித்த நீதிபதி!

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்த வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே நடிகை மீரா மிதுன் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Also Read: “பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்திருந்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும்” : நீதிபதி அதிரடி!