Tamilnadu

"நடிகை கவுதமியின் 6 வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கலாம்” - நீதிமன்ற உத்தரவுக்கு காரணம் என்ன?

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை கவுதமி தாக்கல் செய்துள்ள வழக்கில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை கடந்த  2016-aaம் ஆண்டு 4.10 கோடிக்கு விற்றதாகவும், அந்த சொத்து வருமான வரிச்சட்டப்படி மூலதன சொத்தின் கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளார். 

அந்த சொத்து 4.10 கோடிக்கு விற்கப்பட்டது என்றும், வருமான வரித்துறை கூறியபடி 11.17 கோடிக்கு விற்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 2016-17 வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் 34.88 லட்சம் வருமானத்தை ஒப்புக்கொண்டதாகவும், வட்டியுடன் சேர்த்து 9.14 லட்சத்தை வரியாகச் செலுத்தியதாகவும் கௌதமி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள தேசிய  வருமான வரி மதிப்பீட்டு மையத்திலிருந்து கடிதம் வந்ததாகவும் அதில், விவசாய நிலத்தின் வருவாய் 11.17 கோடி எனக் கருதி மதிப்பீட்டு ஆணை அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த உத்தரவைத் தொடர்ந்து தனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுபட்டதாதகவும் எனவே வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டாபாணி, மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கவுதமியின் ஆறு  வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நான்கு வாரங்களுக்குள் பகுதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Also Read: “இலங்கைத் தமிழர்களே.. கவலை வேண்டாம்” : நம்பிக்கை ஒளி பாய்ச்சிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!