Tamilnadu

“ஒரே நாளில் மட்டும் 1.03 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி” : அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கி பயிர்க் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் ஐந்து சவரனுக்குள் நகைக் கடன் பெற்றவர்களுக்கு, கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் தொகை உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து, விவரங்கள் தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது.

அதன்படி, நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 14.60 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு முதற்கட்டமாக அதற்கான சான்றிதழ்களும் பின்னர் நகைகளும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் மார்ச்-31ஆம் தேதிக்குள் 14.60 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் இ.பெரியசாமி உறுதியளித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.03 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, ஆவணங்களும், நகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, “தகுதியான அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 1.03 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தார்.

Also Read: சிக்குகிறார் எடப்பாடி பழனிசாமி.. குடும்பத்தினருக்காக முறைகேடு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!