Tamilnadu
“மாணவரிடமிருந்து கூடுதலாக கட்டணம் வசூலித்த கல்லூரி” - அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்!
அரசின் உதவித்தொகை கிடைத்தபோதும், தன்னிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மாணவர் வழக்கு தொடர்ந்த நிலையில், கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டியுடன் மாணவருக்கு திரும்ப செலுத்த வேண்டும் என காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அசோக் குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2011-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்ந்தபோது, கல்விக் கட்டணமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தை வங்கியின் கல்வி கடன் மூலம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலும், குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பதாலும் அரசின் உதவித் தொகையும் கல்லூரிக்கு நேரடியாக செலுத்தப்பட்ட நிலையிலும், தன்னிடம் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
படிப்பை முடித்த பின்பு சில ஆண்டுகள் வங்கியில் பெற்ற கல்வி கடனை செலுத்தி வந்த நிலையில், மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் கல்லூரியை நாடியபோது ஒவ்வொரு வருடமும் கல்விக் கட்டணத்தில் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்ததாகவும், பொறியியல் கல்லூரி கல்வி கட்டணத்தை வசூலிப்பதை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளபோதும், அதனை பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி உயர் கல்விதுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் வசூலித்த கூடுதல் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளருக்கும், மனுதாரரிடம் இருந்து வசூலித்த கூடுதல் கல்வி கட்டணத்தை வட்டியுடன் திரும்பச் செலுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
Also Read
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!