Tamilnadu

“ஓட்டிப் பார்க்கட்டுமா..” : வடிவேலு படத்தையே மிஞ்சிய வண்டி திருடன் : போலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது இருசக்கர வாகனத்தை விற்க முடிவு செய்து அதற்காக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்திருந்தார்.

இதைப் பார்த்த முத்துகிருஷ்ணண் என்பவர் அவரை தொடர்புகொண்டு வாகனத்தை வாங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும் வண்டியை ஓட்டிப் பார்த்த பிறகே பணம் தரமுடியும் எனவும் சொல்லியிருக்கிறார். இதற்கு இளையராஜா சம்மதித்துள்ளார்.

பின்னர் வாகனத்தை சிதம்பராபுரம் கிராமத்திற்கு எடுத்துவரும்படி இளையராஜாவிடம் முத்துக்கிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் கூறியபடியே வாகனத்தை அங்கு ஓட்டிச்சென்றுள்ளார். அங்கு முத்துகிருஷ்ணனும், மெக்கானிக் என கூறி அவரது நண்பரும் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் வாகனத்தை சிறிது தூரம் ஓட்டிப்பார்ப்பதாக கூறியுள்ளனர். இவர்கள் பேச்சை நம்பி இளையராஜாவும் வாகனத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் வாகனத்தை ஓட்டிச் சென்ற இருவரும் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளையராஜா இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலிஸார் உடனே விசாரணையைத் தொடங்கினர்.

பின்னர் சாலையோரம் இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த இரண்டு பேரிடம் விசாரணை செய்தபோது அந்த வாகனம் இளையராஜாவினுடையது என தெரிந்தது. இதையடுத்து போலிஸார் வாகனத்தை மீட்டு இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து போலிஸார் இளையராஜாவை காவல் நிலையம் வரவழைத்து அவரிடம் இருசக்கர வாகனத்தை ஒப்படைத்தனர். போலிஸாரின் இந்த துரித நடவடிக்கையை அறிந்து அவர் மகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read: மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய திட்டமிட்டவர் பலி.. காப்பாற்ற முயன்றவருக்கு நேர்ந்த கதி: அதிர்ச்சி சம்பவம்!