Tamilnadu

நைசா பேசி சைசா நகையை உருவச் செய்த இளைஞன்: காரைக்குடியில் வாடகைதாரரால் வீட்டு ஓனருக்கு நேர்ந்த கொடுமை!

சிவகங்கையில் சூடாமணிபுரத்தைச் சேர்ந்த லதா என்ற பெண்மணி தனது தாயுடன் வசித்து வருகிறார். லதாவின் வீட்டு மாடியில் உள்ள வீட்டில் பூபதி என்ற கல்லூரி மாணவனும், வேலைக்கு செல்வோர் என மொத்தம் 8 பேர் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று இரவு முகமூடி அணிந்த கும்பல் ஒன்று லதாவின் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது தாயையும் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர்களிடம் இருந்த 17 சவரன் நகைகளை பறித்துச் சென்றிருக்கிறார்கள்.

இதனையடுத்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் லதா புகாரளித்ததை அடுத்து காவல் ஆய்வாளர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

அதில், கல்லூரி மாணவனான பூபதி மீது போலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் உண்மையை கக்கியிருக்கிறார். அதில் வீட்டு உரிமையாளர் லதாவிற்கு உதவுவது போல நடித்து அவருடைய நகைகள் கேட்டறிந்திருக்கிறார்.

அதனையடுத்து நண்பர்கள் மூவரின் உதவியுடன் லதாவின் நகையை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதோடு, தனக்கு அதில் தொடர்பு இல்லை என்பதை காட்டும் வகையில் தன்னையும் அடிக்கும்படி கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து பூபதியையும், அவரது நண்பர்கள் ஆனந்த், ஐயப்பன், சுதன் ஆகிய மூவரையும் கைது செய்த போலிஸார் அவர்களிடம் இருந்த லதாவின் 17 சவரன் நகையையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

Also Read: நிஜத்தில் ஒரு காதல் கோட்டை: ஃபேஸ்புக் காதலிக்காக உயிரை விட்ட இளைஞர் : கள்ளக்குறிச்சி அருகே நடந்தது என்ன?