Tamilnadu

”திராவிட மாடல், குஜராத் மாடல் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்” - புள்ளி விவரங்களை புட்டு புட்டு வைத்த PTR!

தனியார் தொலைக்காட்சியான இந்தியா டுடேவின் State of the state - tamilnadu first என்ற கருத்தரங்கம் சென்னை நடந்தது.

அதில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திராவிட மாடலுக்கும், குஜராத் மாடலுக்குமான வித்தியாசத்தை தனக்கே உரிய பாணியில் அருமையாக எடுத்துரைத்தார்.

அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

ஒன்றிய அரசின் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால்தான் நாடு வளர்ச்சி காணும்.

அதேவேளையில், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குகிறது. ஆனால், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

பின்னர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தனி நபர் வருவாய் இறங்கு முகத்தில் இருக்கே ஏன்? தமிழ்நாட்டின் GDP ரேங்க்கிங் குறைஞ்சிட்டு வருது என்ன காரணம் என நெறியாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு, வளர்ச்சிக்கான வரையறையாக எதை சொல்லுவிங்க? தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் குஜராத்தை விட 10ல் இருந்து 15 ஆயிரம் குறைவுதான். நிதி மேலாண்மையில் குஜராத் சிறப்பாக செயல்படுகிறது. மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால், தமிழ்நாட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 100% பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு போகாத 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளே தமிழ்நாட்டில் இல்லை. அதேவேளையில், குஜராத்தில் 15 முதல் 20% பெண்கள் பள்ளிக்கூடமே போவதில்லை. இது எந்த மாதிரி வளர்ச்சி?

அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதே குஜராத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். இதில் எந்த சமூக நிலையை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?

GDP மட்டுமே வளர்ச்சியை நிர்ணயிக்காது. நாங்கள் எங்களுக்கென தனி வழி வைத்திருக்கிறோம், அது எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும். அதற்கு பெயர் திராவிட மாடல் எனத் தெரிவித்திருந்தார்.

Also Read: கிராமத்தில் நிகழும் பிரச்னைகளை டெல்லியில் இருந்து எப்படி கையாள முடியும்? - அமைச்சர் PTR சரமாரி தாக்கு!