Tamilnadu

“150 CCTVல் ஆய்வு.. சிறையிலிருந்து வந்தவுடனே மூதாட்டியிடம் கைவரிசை” : பிரபல கொள்ளையன் சிக்கியது எப்படி?

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. மூதாட்டியான இவர் கடந்த 01ம் தேதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவருக்குப் பின்னால் நடந்த வந்த வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது மூதாட்டிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மூதாட்டியின் மருமகன் பரத், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் கொள்ளை நடைபெற்ற இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அந்த மர்ம நபரின் உருவம் சிக்கியது. இதையடுத்து அந்த நபர் இருசக்கர வாகனத்தில் எந்தெந்த வழியாகத் தப்பிச் சென்றார் என 150க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சி ஆய்வு செய்து கொள்ளையனைப் பின்தொடர்ந்தனர்.

இதையடுத்து திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர்தான் மூதாட்டியிடம் நகை கொள்ளையடித்தது தெரிந்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது வீட்டில் போலிஸார் சோதனை செய்தபோது 7 சவரன் தங்க சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். இவர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்து தற்போதுதான் வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: ’ரூ.5 லட்சம் இருந்தாபோதும் ரயில்வேல வேலை ரெடி’ - ஆசைக்காட்டி ரூ88 லட்சத்தை சுருட்டிய உதவி பேராசிரியர்கள்!