Tamilnadu

மாநகராட்சி கொடி... 0001 கார்.. சென்னையை நிர்வகிக்கப் போகும் மிக இளம் வயது மேயர் பிரியா!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகளில் தி.மு.க வெற்றி பெற்று, மாநகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

இத்தேர்தலில் போட்டியிட்டு, 74-வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் ஆர்.பிரியாவை (28) மேயர் வேட்பாளராகவும், 169-வது வார்டில் வென்ற மு.மகேஷ்குமார் துணை மேயர் வேட்பாளராகவும் தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்தது.

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்றுக் கொண்டார். மேயருக்கான அங்கியை சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார்.

சென்னையின் புதிய மேயர் பிரியாவுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேயருக்கான செங்கோலை வழங்கினர்.

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் பிரியாவுக்கு 0001 என்ற எண்ணோடு அரசு சின்னம் பொறித்த முகப்போடு புத்தம் புதிய கார் அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ள ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சியின் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் மேயர் ஆவார். அதேநேரம் சென்னை மாநகராட்சியின் மூன்றாவது பெண் மேயரும் ஆவார்.

இன்று பொறுப்பேற்றுக் கொண்ட மாநகராட்சி மேயர்களிலேயே பிரியாதான் இளம் வயது கொண்டவர். சென்னை மேயர் ஆர்.பிரியா வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

340 ஆண்டுகால சென்னை மேயர் வரலாற்றில் முதல் பட்டியலின பெண் மேயராக மிக இளம் வயது கொண்டவரை பொறுப்பில் அமர வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியல் இனத்தவர்களுக்கும பெருமை சேர்த்திருப்பதாக பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.

Also Read: போட்டியிட்ட 21 இடங்களிலும் அமோக வெற்றி.. மேயர் இருக்கைகளை அலங்கரித்த தி.மு.க-வினர் - குவியும் பாராட்டு !