Tamilnadu

மருத்துவர் தம்பதியிடம் நூதன முறையில் நகை திருட்டு.. விடுமுறைக்கு வந்த இடத்தில் கைவரிசை காட்டிய உறவினர் !

புதுச்சேரி சவரிராயலு வீதியை சேர்ந்தவர் தர்மராஜ் (35). தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு செல்ல தர்மராஜின் மனைவி பீரோவை திறந்து நகையை எடுக்க முயன்றார். அப்போது அதில் வைத்திருந்த 3 பவுன் கம்மல் ஜிமிக்கி, 4 பவுன் நெக்லஸ், 3 பவுன் வளையல், கால் பவுன் டாலர் உட்பட 11 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தர்மராஜ் மற்றும் அவரது மனைவி இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, ஒதியஞ்சாலை போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதனிடையே தர்மராஜியின் வீட்டிற்கு யார்-யார்? வந்து சென்றார்கள் என மருத்துவ தம்பதியினரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது 4 நாட்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த உறவினர் வெங்கடேஷ் வந்து தங்கி சென்றது தெரியவந்தது. வெங்கடேஷ் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வாலிகண்டபுரம் பெட்ரோல் பங்கில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து தனிப்படை போலிஸார் அங்கு விரைந்து சென்று வெங்கடேஷிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனிடையே, அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது திடீரென அதில் பணம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலிஸார் கைது செய்து புதுவை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் அடகு கடையில் வைத்த நகைகளும் மீட்கப்பட்டது.

Also Read: “சொட்டு மருந்து என கூறி மூதாட்டியின் கண்ணில் Harpic ஊற்றிய கொடூர பெண்” : பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?