Tamilnadu

“இதைப் பத்தி அடுத்த புத்தகத்துல எழுதுங்க” : ராகுல் காந்தி ‘கலகல’ பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார். 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர்-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

"உங்களில் ஒருவன்" நூலை ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில், ராகுல் காந்தி பேசுகையில், “இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்திற்கு வருகை தருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியானதே. "உங்களில் ஒருவன்" என்ற அருமையான புத்தகத்தை வழங்கி இருக்கிறார் ஸ்டாலின். தமிழக முதலமைச்சராக தமிழக மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்து வருகிறார்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டேன். அடிக்கடி தமிழகம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். ஏன் என்று கேட்டபோது, நான் என்னை அறியாமல் நான் தமிழன் என கூறினேன். ஏனென்றால் இந்த மண்ணில் எனது ரத்தம் கலந்துள்ளது. எனது ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளதால் தமிழன் என்றேன்.

தமிழகத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ளாமல் நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாது. தமிழர்களிடம் அன்புடன், பரிவுடன் பேசினால் அவர்கள் எதையும் தருவார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று எனது தாயாரிடம் கேட்டேன்; ஒரு 58 அல்லது 60 இருக்கும் என அவர் சொன்னார்; 69 வயது என்று சொன்னேன், அவர் கூகுளில் சர்ச் செய்து பார்த்துவிட்டுதான் ஆம் என ஒப்புக்கொண்டார்.

மு.க.ஸ்டாலின் இளமை ரகசியம் குறித்து அடுத்த புத்தகத்தில் வெளியிட வேண்டும். நான் முன்பு பார்த்ததைவிட இன்னும் இளமையாக தெரிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஆகவே, நாளை அவர் பிறந்தநாள் கேக்கை சரியான அளவே சாப்பிட வேண்டும்.

3,000 ஆண்டுகளாக தமிழ் மக்களின் மீது யாரும் எதனையும் திணிக்க முடிந்ததில்லை; தமிழ் மக்களிடம் அன்போடும் அக்கறையோடும் பேசினால், அவர்களிடம் இருந்து எதையும் பெறலாம். பிரதமர் பொருள்புரியாமல் தமிழகத்தை பற்றி பேசுகிறார்.

தமிழ் மக்களின் குரலை புரிந்து கொள்ளாமல் நான் உங்களுக்காக பேசுகிறேன் என எப்படி சொல்வீர்கள்? நீட் விலக்கு வேண்டுமென தமிழகம் தொடர்ந்து கூறுவதை கேட்க மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள் மீது என்ன மதிப்பு வைத்துள்ளீர்கள்?” என உரையாற்றினார்.

Also Read: “மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டு... தேசிய பிரச்னைகளுக்கு தீர்வு தந்துள்ளது” : தேஜஸ்வி பேச்சு!