Tamilnadu
”மஞ்சப்பை திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது” - தமிழக அரசு தகவலால் வியந்துப்போய் ஐகோர்ட் யோசனை!
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக முதலமைச்சர் அறிமுகம் செய்த மஞ்சப்பை திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில், தமிழகத்தில் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடை செய்யப்படுகிறது.
பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது என்று வாதிடப்பட்டது. அப்போது, நீதிபதிகள் பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுடன், பிற மாநிலங்களிலிருந்து வருவதையும் தடுக்க வேண்டும்.
தடையை அமல்படுத்துவதில் அக்கறையில்லை என்றால் தமிழகத்தில் உற்பத்தியை மட்டும் ஏன் தடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பதா அல்லது ஊக்குவிப்பதா என அரசு உரிய முடிவெடுக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும். பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் மாற்று பொருட்களால் ஆன பைகளுக்கு அதன் மதிப்பைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்படுகிறது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதிடும்போது, நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை இணைந்து பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தி வருகிறது. டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மஞ்சப்பை திட்டம் பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திடீர் ஆய்வுகள் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது.
தமிழக அரசு எடுத்த நடவடிக்கை மட்டுமல்லாமல் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தயாராக உள்ளோம் என்றார். அப்போது நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளபோது, தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதும் சாத்தியம்தான்.
குறிப்பிட்ட ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு அதில் பிளாஸ்டிக் தடை பொருட்கள் மீதான உத்தரவை அமல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.
அதனடிப்படையில், முதல்படியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்தி அதுதொடர்பான அறிக்கையை மூன்று வாரங்கள் கழித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!