Tamilnadu
வன்முறையை தூண்டும் பதிவு : “படிச்ச நீங்களே இப்படி பண்ணலாமா?” - பா.ஜ.க நிர்வாகிக்கு குட்டு வைத்த ஐகோர்ட்!
மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் ட்விட்டர் பதிவை வெளியிட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், ஒரு மதத்திற்கு எதிராகவும் கருத்தகளைப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை தமிழ்நாடு பா.ஜ.க.வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை பகிர்ந்திருந்த சவுதாமணி தைரியமா? விடியலுக்கா? என்றும் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ் சவுதாமணி மீதான புகார் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், அவர்களது விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் என்பதை உறுதி செய்தது காவல்துறையினர்.
மேலும், அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட வழக்கில் புதிதாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி சவுதாமணி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சமுதாயத்தில் உயர் இடத்தில் இருக்கும் படித்தவரே இதுபோன்ற தவறை செய்யலாமா? என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!