Tamilnadu
”தமிழ்மண் என்றென்றும் சமூகநீதி மண்தான்.. மீண்டும் நிறுவிக் காட்டிய தமிழ்நாடு”: தொல்.திருமாவளவன்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தி.மு.க அரசுக்கும், தி.மு.க கூட்டணிக்கும் மக்கள் வழங்கியுள்ள மதிப்பார்ந்த பெருங்கொடை என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கியுள்ள வாக்காளப் பொதுமக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்டணியைக் கட்டுக்கோப்பாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்தி இந்த மாபெரும் வெற்றியைச் சாதித்துக் காட்டியுள்ள முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கு தென்னைமரம் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் எம்மை ஓர் அரசியல் சக்தியாக அங்கீகரித்துள்ள அனைத்துத் தரப்பு வாக்களர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் யாவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாதிய- மதவாத சனாதன சக்திகள் பரப்பிய அவதூறுகள் யாவற்றையும் துடைத்தெறிந்து விடுதலைச் சிறுத்தைகளின் அயராத உழைப்பையும் அரசியல் நேர்மையையும் அங்கீகரிக்கும் அருஞ்செயலை நிகழ்த்தியுள்ள பொதுமக்கள் யாவருக்கும் காலமெல்லாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்த மாபெரும் வெற்றி திமுக அரசின் எட்டு மாதகால நல்லாட்சி நிர்வாகத்துக்கும், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மீதான நம்பகத் தன்மைக்கும் தமிழக மக்கள் வழங்கியுள்ள மதிப்பார்ந்த பெருங்கொடையே ஆகும்.
உள்ளாட்சி அமைப்புகளிலும் நல்லாட்சி நிர்வாகம் விரிவடையவும் வலுவடையவும் இந்த வெற்றி ஏதுவாக அமையும்! சாதிய- மதவாத பிரிவினைவாதக் கும்பலுக்கும் அத்தகைய சனாதனக் கும்பலுக்குத் துணை போவோருக்கும் தமிழக மக்கள் கொடுத்த பெரும் படிப்பினையாகவே இந்த தேர்தல் முடிவுகள். அமைந்துள்ளன.
இதன்மூலம் தமிழ்மண் என்றென்றும் சமூகநீதி மண் தான் என்பதை மீண்டும் நிறுவிக் காட்டியுள்ள எமது வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.
இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சுயமரியாதைமிக்க மகளிர் பாசிஸ்ட்டுகளையும், அடிமைகளையும் வீழ்த்தப்போவது உறுதி!” : உதயநிதி திட்டவட்டம்!
-
“பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் சம்மட்டி அடி கொடுப்போம்!” : கனிமொழி எம்.பி சூளுரை!
-
“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?