Tamilnadu

“ஸ்டாலின் அரசு” : அடுத்த தலைமுறையும் பேசும் சமூக நீதி - ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நெகிழவைத்த குழந்தைகள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குழந்தைகள் பங்கேற்கும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில், சமூக நீதி காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் புகழ்ந்து நிகழ்ச்சி தயாரித்துள்ளனர்.

அண்மையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் நடைபெறும் அன்னதானத்தைச் சாப்பிடச் சென்ற தன்னை, முதல் பந்தியில் அமரக் கூடாது என்று கூறி கோயிலில் சிலர் தடுத்து, திருப்பி அனுப்பியதாக நரிக்குறவப் பெண் ஒருவர் குற்றச்சாட்டுத் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

அங்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு, குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நரிக்குறவப் பெண் உட்படப் பொதுமக்களுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து, அன்னதானத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டார். பின்னர், நரிக்குறவ மக்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கோயில் வளாகத்தில் அமைச்சர் வேட்டி, சேலை வழங்கினார்.

இதையடுத்து அஸ்வினி வீட்டுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறினார். அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் நேரடியாக ஆய்வும் செய்தார்.

தொடர்ந்து மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள நரிக்குறவர்கள், இருளர் இனச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, நிலப்பட்டா, நலவாரிய அடையாள அட்டை என அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்வை ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ ரியாலிட்டி ஷோவில் குழந்தைகள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். சமூக நீதி காத்த தி.மு.க அரசை குழந்தைகள் பெருமைப்படுத்திய இந்நிகழ்ச்சி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also Read: “நல்லா பார்த்தீங்களா ஜீ... அது முதலைதானா? ” : man vs wild மோடியை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !