Tamilnadu

“பேய் பிடித்ததாகக் கூறி கோயிலில் தங்கவைக்கப்பட்ட இளம்பெண் மர்ம மரணம்.. சாமியார் கைது” : பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவரின் 20 வயதாகும் மகள் ஹேமமாலினி. இவர் அருகில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், இவருக்கு பேய் பிடித்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனால் கடந்த 18ஆம் தேதி ஓடை ஓரம் பகுதியில் உள்ள கோயிலுக்கு பேய் ஓட்டுவதற்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு கோயில் பூசாரி முனுசாமி என்பவரும் அவரது மனைவியும் இருந்துள்ளனர். மாணவியை பார்த்த பூசாரி, கோயிலில் தங்கி பூசை செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, ஹேமாமாலினி தனது பெரியம்மா இந்திராணி மற்றும் தங்கையுடன் கோயிலில் பூசைக்காக சென்றிருக்கிறார்.

அப்போது பூசை முடிந்தவுடன் ஹேமமாலினியும், அவரது தங்கையும் பூசாரி அறையிலும், அவரது பெரியம்மா கோவில் மண்டபத்திலும் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஹேமமாலினி வாந்தி எடுத்து மயங்கி பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடியுள்ளார். இரண்டு மணிநேரத்திற்கு பிறகு ஆட்டோவில் அழைத்துக்கொண்டு 12 கி.மீ தூரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து 2 மணி நேரத்திற்கு பிறகு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த நிலையில் தொடர் சிகிச்சையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார் மாணவி ஹேமமாலினி. மேலும், மாணவி ஹேமமாலினி விஷம் குடித்து உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சாமியார் முனுசாமியை போலிஸார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்நலக்குறைவால் கோயிலுக்குச் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “My role model கோட்சே”: பள்ளி மாணவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் வகையில் பேச்சுப்போட்டி-குஜராத் கொடூரம்!