Tamilnadu

த்ரில்லர் கதைக்கு அடிமையான இளைஞர்.. YouTube பார்த்து கடலில் குதித்து தற்கொலை: அதிர்ச்சி சம்பம்!

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட புத்தன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிலால் மூர்த்தி. இவரது மனைவி பிந்து. இந்த தம்பதியின் மூத்தமகன் மிதுன். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே மிதுன் ஆன்லைனில் படித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 7ம் தேதி வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் மிதுன் சென்று வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.

ஆனால், மிதுன் தொடர்பான எந்த தகவலும் பெற்றோர்களுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து போலிஸில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலிஸார் மிதுன் அறையில் சோதனை செய்தனர். அப்போது அவர் பயன்படுத்தி வந்த ஐபோனை ஆய்வு செய்தபோது வலியில்லாமல் தற்கொலை எப்படி செய்து கொள்வது தொடர்பான வீடியோக்கள் இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் விசாரித்தபோது, மிதுன் சிறு வயதிலிருந்தே அதிகமான திரில்லர் புத்தகங்களைத் தேடிப் படித்து வந்துள்ளார். இதனால் தன்னை ஒரு திரில்லர் கதாபாத்திரமாக நினைத்துக் கொண்டுள்ளார். இவரின் செயலை பார்த்து பெற்றோர்கள் படிப்பில் கவனம் செலுத்தும் படி அவரை திட்டியுள்ளனர்.

இதனால், வாழப்பிடிக்கவில்லை என நண்பர்களிடம் கூறிவந்துள்ளார். இந்நிலையில்தான் மிதுன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து போலிஸார் குளச்சல் கடற்கரைப்பகுதியில் இருந்த அவரது இருசக்கர வாகனத்தை மீட்டனர். இதனால் சந்தேகம் அடைந்தபோலிஸார் மீனவர்கள் உதவியுடன் கடல் பகுதியில் தேடிப்பார்த்தனர்.

அப்போது, கடற்கரையில் இருந்த கற்களுக்கு இடையே இருந்த மிதுனின் சடலத்தை போலிஸார் கண்டுபிடித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். த்ரில்லர் கதைகளுக்கு அடிமையாக வாலிபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2 வயது குழந்தையின் வாயில் குத்திய 59 செ.மீ கம்பி.. 45 நிமிடத்தில் அகற்றிய அரசு மருத்துவமனை: நடந்தது என்ன?