Tamilnadu

“உள்ளாட்சி தேர்தலை நடத்த தைரியமில்லாத பழனிசாமிக்கு தி.மு.க அரசை குறை கூற தகுதி இல்லை”: கனிமொழி MP பேச்சு!

தி.மு.க மாநில மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி அவர்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன்தொடர்ச்சியாக நெல்லையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். மேலப்பாளையம் பஜார் திடலில், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசுகையில், ”உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டமன்றம் பாராளுமன்ற தேர்தலை விட மிக முக்கியமானதாகும்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகளை சரியானவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுத்தால் தான் உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரும் .

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளாட்சியில் சிறப்பாக அ.தி.மு.க அரசு செயல்பட்டு வந்த்தாக கூறிவருகிறார். உள்ளாட்சி தேர்தலையே நடத்த தைரியம் இல்லாத பழனிச்சாமி அரசு எப்படி சிறப்பாக செயல்பட்டிருக்க முடியம், 10 ஆண்டுகள் உள்ளாட்சியில் ஊழல்தான் நடந்துள்ளது. அதுபோன்று அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கூறப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. ஆனால் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வரும் முன்னரே ஊர் ஊராக சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை அறிந்து ஆட்சிக்கு வந்தவுடன் அதற்காக தனித்துறையையே ஏற்படுத்தி தீர்வு கண்டு வருகிறார்.

இதில் தென்தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து தொழில்கள் தொடக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். எதுவுமே செய்யாத எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் மறக்கமாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள், அவருக்கு தி.மு.க ஆட்சியை குறைகூற எந்த தகுதியிம் இல்லை. உள்ளாட்சியில் பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என்று கூறுகிறார். ஆனால் தேசிய அளவில் கூட்டணி தொடர்கிறது, பா.ஜ.க மக்களை மதம், சாதியால் பிரிக்கும் மக்கள்விரோத இயக்கம்.

உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பாளையங்கோட்டை சமாதானபுரத்திலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

Also Read: “தேர்தல் நடைபெறும் போது பிரச்சினையை தூண்டிவிட்டு மக்களை திசைதிருப்பிகிறது பா.ஜ.க” : ஈ.ஆர்.ஈஸ்வரன் சாடல்!