Tamilnadu

தனியாகச் செல்லும் பெண்களே குறி.. தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட இந்திய கும்பல்: சிக்கியது எப்படி?

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தா. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி ரயில்வே கேட் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து வாழப்படி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி போலிஸார் விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கைத்துப்பாக்கி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் அவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புஸ்பேத்திரபிங்கி, சதாம்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள்தான் ஆசிரியரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும், துப்பாக்கியைக் காட்டி பலபேரிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி மற்றும் 11 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

Also Read: திடீரென கடைக்குள் புகுந்த கார்.. தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: நள்ளிரவில் நடந்தது என்ன?