Tamilnadu

சிறைக்குச் செல்வாரா வினோஜ் பி.செல்வம்? - மதக் கலவரத்தை தூண்ட முயன்றதற்காக வழக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பா.ஜ.க இங்கு மதக் கலவரம் மூலம் மக்களிடையே பகைமையை உருவாகி அதில் அரசியல் செய்யும் வேலையை முனைப்புடன் செய்து வருகிறது. தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசின் மீது வீண் பழி மற்றும் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது தமிழ்நாடு பா.ஜ.க.

குறிப்பாக, இந்து மத மக்களிடையே இந்த அரசின் மீது உள்ள நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில், அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. பா.ஜ.கவின் இத்தகைய கீழ்த்தரமான அரசியலுக்கு அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்தாலும், பா.ஜ.க தனது போக்கை திருத்திக்கொள்ள துளியும் மனம் இல்லாமல் செயல்படுகிறது.

சமீபத்தில் கூட, தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவி, தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க இந்துத்வா கும்பல், மாணவி மரணத்துக்கு தனியார் பள்ளியின் மதமாற்ற முயற்சியே காரணம் என்று குற்றம்சாட்டின.

பின்னர் தமிழ்நாடு அரசின் துரித முயற்சியால் உண்மை வெளிகொண்டுவரப்பட்டு, பா.ஜ.கவின் கீழ்த்தரமான அரசியல் அம்பலப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.கவில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகி ஒருவரே போலி செய்தியை பகிர்ந்து மக்களிடையே அம்பலமாகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவின் தமிழ்நாடு இளைஞரணி தலைவராக இருப்பவர் வினோஜ் பி.செல்வம். இவர் தி.மு.க அரசு 100க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களை இடித்துவிட்டதாக போலி செய்தியை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் தவறான தகவலையும் சமூகத்தில் பிரிவினையும் மதக் கலவரத்தையும் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் கூறி, இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், “பா.ஜ.கவின் தமிழ்நாடு இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டதாகவும், அந்தப் பதிவில், மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையிலும் உள்ளதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ம்த்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலிஸார், வினோஜ் பி.செல்வம் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Also Read: “மதமாற்றம்னு சொல்லச் சொல்லி சிலர் மிரட்டுறாங்க” : ஆட்சியரிடம் ஊர்மக்கள் புகார் - அம்பலமான பா.ஜ.கவின் சதி!