Tamilnadu

வாங்கிய கடனுக்காக 2 மாதக் குழந்தையை விற்ற தந்தை - தாயின் புகாரை ஏற்று போலிஸார் அதிரடி - நடந்தது என்ன ?

திருச்சி உறையூர் காந்திபுரம் தேவர் காலனி பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலாம் இவரது மனைவி கைருன்னிஷா . இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு ஆண் குழந்தை 5-வதாக பிறந்துள்ளது.

கூலி தொழிலாளியான அப்துல்சலாம் சரிவர எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்கள் உறவினர்களிடம் கடனாக பெற்று பணத்தை சூதாடி வந்தாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆரோக்கியராஜ் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை ஈடுகட்ட ஆரோக்கியராஜ் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு குழந்தை இல்லாததால் தற்போது புதிதாக பிறந்த குழந்தையை தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அப்துல் சலாம் கைருன்னிஷாவிடம் பேசி சமாதானம் செய்து மனதை மாற்றி, கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை ஆரோக்கியராஜிடம் குழந்தையை விற்று பணத்தையும் பெற்றுள்ளார். தற்போது திடீரென கைருன்னிஷா தன்னுடைய குழந்தையை மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்று அப்துல் சலாமிடம் கேட்க அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாய் கைருன்நிஷா தனது குழந்தையே மீட்டு தர வேண்டும் என உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பெற்ற மகனை 80 ஆயிரத்திற்கு விற்ற தந்தை அப்துல் சலாம், ஆரோக்கியராஜ் மற்றும் அவருடைய உறவினரான பொன்னர் மற்றும் சந்தான மூர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மணப்பாறை கிளை சிறையில் அடைத்தனர்.

Also Read: “நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.. அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்” : கட்கரிக்கு முதல்வர் கடிதம்!