Tamilnadu

கோவை ஜல்லிக்கட்டு நிறைவு - அசத்திய காளைகள்... 21 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு!

கோவை செட்டிபாளையம், புறவழிச்சாலையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. இதனை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் உறுதிமொழி கூற, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசுகள், அண்டா, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுடன் வந்தவர்கள் 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

12 மாடுகளைப் பிடித்து மதுரையைச் சேர்ந்த மாடுபிடி வீரருக்கு தங்க காசுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். இளம்பெண் லோகேஸ்வரியின் 2 காளைகள் வெற்றி பெற்று 2 தங்க காசுகளை வென்றது. மேலும், கோவை காரமடையைச் சேர்ந்த இளம்பெண் கீர்த்திகாவின் காளை வெற்றி பெற்றது. அவருக்கு தங்க காசை அமைச்சர் வழங்கினார்.

7வது சுற்று நிறைவில், 10 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதிச்சுற்றில், அனைத்து சுற்றுகளிலும் களம் கண்ட சிறந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். தொடர்ந்து இறுதி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அபிநாத் என்ற மணி 21 காளைகளை அடக்கி முதல் பரிசான ஆல்டோ 800 காரை அமைச்சரிடம் பரிசாகப் பெற்றார். மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் 19 காளைகளை பிடித்து இரண்டாம் பரிசான யமஹா பைக்கை வென்றார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கார்த்திக் 18 மாடுகளை பிடித்து மூன்றாம் பரிசான எக்ஸ்.எல் சூப்பர் இருசக்கர வாகனத்தைப் பெற்றார்.

வெற்றி பெருபவர்களுக்கும், காளை உரிமையாளர்களும், முதல் பரிசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் ஆல்டோ காரும், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களின் சார்பில் யமகா பைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: விறுவிறுப்பாக நடந்துமுடிந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : சீறிப்பாயும் காளைகளை வீரத்தோடு அடக்கிய காளையர்கள்!