Tamilnadu

கோலமாவு கல் எடுக்க நினைத்து மண் சரிவில் சிக்கிய பெண்கள்.. 2 பேர் உயிரிழப்பு: கிருஷ்ணகிரியில் சோகம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமநத்தம் கிராமத்தில் செங்கல் சூளைகளுக்கு 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது வெள்ளை நிற கற்கள் இருந்துள்ளது.

இதைப் பார்த்த சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராதா, லட்சுமி, உமி, விமலம்மா ஆகியோர் அந்த கல்லை எடுத்து பொடியாக்கினால் கோலமாவாகப் பயன்படுத்த முடியும் என நினைத்துள்ளனர்.

இதனால், அவர்கள் செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி கல்லை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து அவர்கள் மேல் விழுந்துள்ளது. இதில் நான்கு பேரும் சிக்கிக்கொண்டனர்.

இதைப்பார்த்த கிராம மக்கள் உடனே மண்ணில் சிக்கிய பெண்களை மீட்டு அருகே இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ராதா மற்றும் லட்சுமி ஆகிய இருவர் உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.

மேலும் மற்ற இரண்டு பேருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து செங்கல் சூளையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கணவருடன் சண்டை.. 100 அடி கிணற்றில் குதித்த மனைவி : நடந்தது என்ன?