Tamilnadu

“பழங்குடி பாகனிடம் பாசப் போராட்டம் நடத்திவரும் குட்டியானை” : முதுமலை காப்பகத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலை கிராமத்தில் கூட்டத்துடன் வெளியேறிய காட்டு யானை கூட்டத்திலிருந்து பிறந்து 20 நாட்கள் மட்டுமே ஆன குட்டி யானை தாயைப் பிரிந்து கிராமத்திற்குள் நுழைந்தது.

இந்த குட்டி யானையை பலமுறை தாயுடன் சேர்க்க முயற்சி மேற்கொண்ட நிலையில் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து பிறந்து 20 நாட்கள் மட்டுமே ஆன அந்த குட்டி யானை இரண்டு வருடங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு குறும்பர் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பொம்மன் என்ற பழங்குடியின பாகனை இந்த குட்டி யானையை பராமரிக்க நியமித்தனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட பொம்மன் இந்த குட்டி யானைக்கு அம்மு என்ற பெயர் சூட்டி அதை பராமரிக்க தோன்றினார். பிறந்த 20 நாட்கள் மட்டுமே ஆன அந்த குட்டிக்கு லாக்டோஜன் முதல் பால் வரை தனது கையால் ஊட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்.

தற்போது அம்மு என்ற பெயருடன் வலம் வரும் இந்த குட்டியானை பாகம் பொம்மை இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருப்பதில்லை. பொம்மன் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் பின்னாடியே செல்லக்கூடிய இந்த குட்டி யானை அம்மு, சிறிது நேரம் பாகன் பொம்மனை பார்க்காவிட்டால் குட்டி யானை அம்மு கத்தி பிளிறியபடி பாகன் பொம்மனை தேடுகிறது. தற்போது இந்தக் குட்டியானை அம்மு பாகன் பொம்மன் சொல்லும் கட்டளையை கீழ்படிந்து மண்டியிடுவது, தும்பிக்கையால் கடவுளுக்கு வணக்கம் செலுத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விட்டுச் சென்ற தாய்க்கு பிறகு தற்போதுவரை கடந்த இரண்டு வருட காலமாக குட்டி யானை அம்முவுக்கு தாயாக இருந்து வரும் பாகன் பொம்மனை பிரிய மனமின்றி அவர் செல்லும் இடத்திற்கெல்லாம் சென்று வரும் இந்த குட்டி யானையின் பாசப் போராட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

தற்போது இந்த குட்டி யானைக்கு முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் பொம்மி என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. பாகன் பொம்மனை தற்போது பொம்மி என்ற அம்மு குட்டி யானை ஒருமணிநேரம் பார்க்காவிட்டால் கண்கலங்கி அழுகும் காட்சியையும் நம்மால் பார்க்க முடிகிறது.

Also Read: “ஐரோப்பியாவின் ‘ரவுல் வாலன்பெர்க்’ விருது.. தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” : எவிடன்ஸ் கதிர் பேட்டி!