
சிந்து சமவெளி நாகரிகத்தைச் ‘சிந்து சரசுவதி நாகரிகம் ' என வரலாற்றைத் திரிக்கும் கோவைக் கருத்தரங்கம் என்றும் மதவெறிக் கிளை அமைப்பான தென்னிந்திய ஆய்வு மையம் (CSIS) தடுப்போம் என்றும் கழகக் கல்வியாளர் அணித் தலைவர் செந்தலை ந.கவுதமன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:-
ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்பின் கிளை அமைப்பே தென்னிந்திய ஆய்வு மையம் எனும் சி.எஸ்.ஐ.எஸ்.! தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளுக்குள் கருத்தரங்க வேடத்தில் புகுந்து ஆள் பிடிப்பதும் காவிமயமாக்குவநும் இந்த அமைப்பின் வேலை.
மாணவர்களைப் பிளவு படுத்தும் வேலையையும் சாதி, மத வெறியர்களாக்கும் வேலையையும் வெகுநுணுக்கமாக இவ்வமைப்பு நிகழ்த்தி வருகின்றது.இந்த மதவெறி அமைப்பை அனுமதித்து வெளிப்படையாக ஒத்துழைக்க முன்வந்திருக் கிறது கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி.
தமிழ்நாட்டரசின் நிதியில் இயங்கும் அரசு உதவிபெறும் கல்லூரி இது ! வெளிப்படையாக மதவெறி அமைப்போடு கைகோத்துச் செயல் படும் துணிச்சல் இந்தக் கல்லூரிக்கு எப்படி வந்தது ?
உயர்கல்வித்துறை மிகுந்த கவலையோடு இக்கல்லூரி மீதும், நச்சுவிதை தூவும் ஆசிரியர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இளையதலைமுறையை மதவெறிப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையும் அறிவாளர் கடமையும் ஆகும்.
கட்டுரையைத் தமிழில் மட்டுமல்ல; இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் கூட எழுதலாம் என்கிறது அறிக்கை . உள்நோக்கம் என்ன என்பதைப் பரிந்து கொள்ள இந்த ஒருவரி போதாதா?
சிந்து சமவெளி நாகரிகத்தைச் சிந்து சரசுவதி நாகரிகம் ‘எனக் கொச்சைப்படுத்துவது, தமிழர் வரலாற்றைத் தாழ்த்தும் அழிவுமுயற்சி என்பதை அறியாதவர்களா ஆசிரியர்கள்?
தங்கள் பெயரை இந்த அறிக்கையில் போடச் சம்மதித்தவர்கள், எந்த நெருக்கடியால் இப்படிச் செய்தார்கள் என்பதை அரசு கண்டறிய வேண்டும்.
கல்லூரிகளை மதவெறியர் பிடிக்குள் கொண்டுசெல்லும் இதுபோன்ற அழிவுமுயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். கல்வித்துறையைக் காவிமயமாக்கக் கைகொடுப்போரை அடையாளம் காண வேண்டும் ; அப்புறப் படுத்த வேண்டும். மனிதநேயம் காப்பாற்றப்பட மதவெறி முயற்சிகளைக் களையெடுப்பது மிக முக்கிய மான பணி .
மதவெறியை மறைமுகமாகத் தூண்டும் சி.எஸ். ஐ. எஸ். போன்ற அமைப்புகள், கல்லூரிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும்.
நஞ்சுக்கு இனிப்பு தடவி நீர்வளப் பாதுகாப்புபோன்ற முகமூடிகளோடு வருவது அவர்களின் வழக்கம். முகமூடியைக் கிழித்துக் காட்டி மதவெறிக் கோரமுகத்தை அடையாளம் காட்டும் கடமை, அறிவு வளர்ச்சியை விரும்பும் அனைவரின் கடமை.
கோவைக் கல்லூரியில் திசம்பர் 12, 13 நிகழவுள்ள கருத்தரங்க முகமூடி அழிவுச்செயல் நிகழாமல் தடுப்பது உடனடித் தேவை என தி.மு.க. கல்வியாளர் அணி தலைவர் செந்தலை ந.கவுதமன் தெரிவித்துள்ளார்.






