Tamilnadu

“இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல; ஒரு இனத்தின் ஆட்சி”: தமிழினத்தின் ஆட்சியை நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

2021 முடிந்து 2022 பிறக்கிறது. இந்த முறை வழக்கமான ஆண்டு மாற்றமாக மட்டும் இருக்கப்போவது இல்லை. ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் ஆண்டாக இருப்பதால், 2022 என்பது புதிய முன்னேற்ற ஆண்டாக அமையப்போகிறது. அதற்கான அறிகுறிகள் 2021ஆம் ஆண்டிலேயே அதிகமாகத் தெரியத் தொடங்கி விட்டன!

கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. முதல் ஐந்தாண்டுக் காலத்தில் தனது ஊழல் வழக்கில் இருந்து விடுபடுவதற்கான தந்திரங்களிலேயே ஜெயலலிதாவின் ஆட்சி கடந்தது. அடுத்து, உடல்நலிவுற்றதால் மேலும் சில ஆண்டுகள் கரைந்தன. மறைவுக்குப் பிறகு அடிமைக் கூட்டத்தில் சிக்கி அடுத்த நான்காண்டு காலம் நகர்ந்தன. இந்தப் பத்தாண்டு காலம் என்பது, அ.தி.மு.க.வால் சூறையாடப்பட்ட ஆட்சி நிர்வாகமாகத் தான் இருந்தது.

ஓடி ஒளிந்துகொண்டு இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி என்றால், படுத்துப்பதுங்கிக் கொண்டு இருக்கிறார்கள் மற்ற மாஜிக்கள். ஜெயலலிதாவின் இன்னொரு தலைமைச் செயலகமாக இருந்த கொடநாடு பங்களாவில் நடந்த மர்ம மரணங்களும், ஜெயலலிதாவே சந்தித்த மரணத்தில் இருந்த மர்மங்களும், தூத்துக்குடியில் துள்ளத் துடிக்க நடந்த 13 பேரின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையும், பொள்ளாச்சியில், ‘விட்டுடுங்கண்ணா’ என்று அபலைப்பெண்களின் அபயக் குரலும் அ.தி.மு.க. ஆட்சியின் கடந்தகால லட்சணத்தைக் காட்டுகிறது.

‘உங்கள்மீது ஊழல் புகார் சொல்லப்படுகிறதே?’ என்றபோது, ‘யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை?’ என்று திருப்பிக் கேட்ட பழனிசாமியின் காலத்து முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியில் வந்துகொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் டெல்லிக்கு அடமானம் வைத்து, தனது கறைபட்ட கரத்தைக் காப்பாற்றிக் கொண்டார் பழனிசாமி.

நீட் முதல் ஜி.எஸ்.டி. வரை அவர் தூக்கிக் கொடுத்த உரிமைகளை மீண்டும் பறிப்பதே பெரிய வேலையாக இன்றைய தமிழக அரசுக்கு ஆகிவிட்டது. இத்தகைய அ.தி.மு.க. ஆட்சியின் அவல நிலைக்கு கடந்த மே மாதம் தமிழ்நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தார்கள். வீழ்ச்சியுற்ற தமிழகத்துக்கு எழுச்சியையும் இருண்ட தமிழ்நிலத்துக்கு விடியலையும் ஏற்படுத்தும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தது. ஐம்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையைக் கொண்ட ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ பதவியேற்ற அந்தப் பொழுது முதல், தமிழகத்துக்குப் புதிய மலர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட்டது.

“வாக்களித்தவர்க்கு மட்டுமல்ல; வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்து நான் முதலமைச்சர்’’ என்று அறிவித்தபடி தனது பயணத்தைத் தொடங்கினார். கோட்டையில் உட்கார்ந்து உத்தரவு போடுபவராக இல்லாமல் - கொரோனா வார்டுக்குள்ளும் போய்ப் பார்த்தார். கூவத்துக்குள்ளும் நுழைந்தார். மழையோடு மழையாக நின்றார். வெள்ளம் நகரும் தண்ணீரோடு சேர்ந்து நகர்ந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பக்கத்தில் போய் நின்றார். அகதிகள் முகாமுக்குப்போய் ஆறுதல் அளித்தார். இருளர் கிராமத்துக்கு போய் நிலம் அளித்தார். மாற்றுத்திறனாளிகளை கடலின் கரை வரைக்கும் அழைத்துப் போனார். பேருந்துகளில்பயணம் செய்தார். டீக்கடையில் தேநீரைச் சுவைத்தார். ‘அம்மா’ உணவக உணவையே சோதித்துப் பார்த்தார். உடல் நலிவுற்ற சேலத்துச் சிறுமியைப் போய்ப்பார்த்தார். காவல் நிலையத்துக்குச் சென்று ‘ரைட்டர்’ நாற்காலியில் அமர்ந்தார்.

தொழில் அதிபர்களையும் வரவழைத்துப் பேசினார். பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களில் கையெழுத்துப் போட்டுள்ளார். இலட்சக்கணக்கான இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினார். மாவட்டங்கள்தோறும் பயணித்தார். பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். முடக்கப்பட்ட திட்டங்களை உயிர்ப்பித்தார். புதிய எண்ணங்கள் கொண்டவர்களை அழைத்துப் பேசுகிறார்.

காலநிலை மாற்றம் குறித்துக் கவலைப்பட்டார். தமிழ் இளைஞர்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்கிறார். தமிழுக்கும் முன்னுரிமை தரப்படுகிறது. அர்ச்சகர்கள் அனைவர்க்கும் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகி வருகிறார்கள். தேர்தலுக்கு முன்னதாக அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று பெற்ற மனுக்களை முன்வைத்து ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற துறையை உருவாக்கி இலட்சக்கணக்கான மனுக்களையும் பரிசீலித்து அவர்கள் கேட்டவை அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன. அத்துடன் இப்போதும் அனைத்து மாவட்டங்களிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, படிப்படியாக, தகுதி வாய்ந்த மனுக்கள் அனைத்தும் நிறைவேறும் காட்சியைப் பார்க்கிறோம்!

‘இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல; ஒரு இனத்தின் ஆட்சி’ என்று சொன்னார் முதலமைச்சர். அத்தகைய தமிழினத்தின் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். “சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!” - என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“எங்கள் அரசு, தமிழ்நாட்டை தென்கிழக்கு ஆசியாவிலேயே தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற வேண்டும். உலகத்துக்கு மனிதவளத்தைத் தரும் மாநிலமாக மாற வேண்டும். ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாகமட்டுமல்ல; சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு வளருவதற்குத் திட்டமிடும் சூழலை உருவாக்கவேண்டும்” என்றும் சூளுரைத்துள்ளார். இந்தச் சொற்கள் செயல்வடிவம் பெறும் ஆண்டாக 2022 அமையட்டும்!

Also Read: திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி... ஊரடங்கு கட்டுப்பாடுகளின் முக்கிய அம்சங்கள்..!