Tamilnadu

கட்டடம் இடிந்து காவலர் உயிரிழப்பு.. இரங்கல் தெரிவித்து ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!

மதுரை கீழவெளி வீதியில் உள்ள பழமையான கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இன்று (22-12-2021) அதிகாலை, மதுரை மாநகர் விளக்குத் தூண் காவல் நிலையத் தலைமைக் காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு பாதுகாப்புப் பணிக்குச் சென்றபோது, கீழவெளி வீதியில் உள்ள கணபதி ஸ்டோர் என்ற பூச்சி மருந்து கடையின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, பாழடைந்த நிலையில் இருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் தலைமைக் காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் என்பவருக்குத் தலையில் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணமும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும், அதோடு மட்டுமல்லாமல் பலத்த காயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தந்தையின் நிழல் சண்முகநாதன் : குடும்பத்தினருடன் இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!