Tamilnadu

“அவதூறு வழக்கில் மாரிதாஸ் கைது” : போலிஸாருக்கு இடையூறாக வாக்குவாதம் செய்த பா.ஜ.கவினரால் பரபரப்பு!

தமிழ்நாட்டில் கலவரத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல் பல குறுக்கு வழியை கையில் எடுத்துள்ளது. குறிப்பாக கருத்தியல் ரீதியாக பதில் பேச முடியாத வலதுசாரிகள், பின்பற்றும் ஒரே யுக்தி பொய்ச்செய்தி மற்றும் அவதுறுகளே.

ஒரு பொய்யை பலமுறை கூறினால் உண்மையாக்கி விடலாம் என்பதே அவர்களின் அற்ப அரசியல் கொள்கை. அப்படி திட்டமிட்டு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதிலும் சில மோசடியாளர்களை களம் இறக்கியுள்ளது.

அப்படி திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்புவதில் முதன்மையான மோசடியாளர் மாரிதாஸ். இந்த மாரிதாஸ் என்பவர் கடந்தாண்டு கூட பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மீதும், பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகளை எதிர்த்து கேள்வி கேட்கும் ஊடகவியலாளார்களை அவதூறாக சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றமும் மாரிதாஸ் வெளியிடும் அவதூறு வீடியோக்களை நீக்கவும், பொய் தகவலோடு வீடியோ வெளியிடக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனாலும் மாரிதாஸ் தனது போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான ஆட்சி மீது அவதூறு பரப்புவதையே தனது முழுநேர பணியாக மாற்றிக்கொண்ட மாரிதாஸ், அரசின் பல்வேறு நல்லத்திட்டங்கள் பற்றி பொய் பிரச்சாரம் செய்து வந்தார்.

அதன்தொடர்ச்சியாக சமீபத்தில் முதுகுளத்தூரைச் சேர்ந்த மணிகண்டனின் உயிரிழப்பிற்கு காவல்துறையே காரணம் என அவதூறு பரப்பி வீடியோ மற்றும் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். முதலில் அவரது மரணத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த காவலர்களே காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு காவல்துறையினர் காரணம் இல்லை என ஆதாரங்களுடன் கூறப்பட்டது.

ஆனால், மாரிதாஸ் தொடர்ந்து அவதூறு பரப்பிவந்த நிலையில், மணிகண்டன் இறந்த வழக்கில் காவல்துறையை விமர்சித்த வழக்கில் போலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று கைது செய்ய முற்பட்டனர். அப்போது தகவல் அறிந்து வந்த பா.ஜ.கவினர் மாரிதாஸை கைது செய்யச் சென்ற காவல்துறையினருக்கு இடையூறு செய்யும் விதமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலிஸார், மாரிதாஸை கைது செய்து அழைத்துச் சென்றனர். மதுரை புதூர் காவல் நிலையத்தில், அண்ணா நகர் காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாரிதாஸை கைது செய்ய சென்ற காவல்துறையினருக்கு இடையூறு செய்யும் விதமாக பா.ஜ.கவினர் வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: “1972 உருகுவே விமான விபத்து.. 72 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட பயணிகள்” : திகில் சம்பவத்தின் பின்னணி?