Tamilnadu
தூத்துக்குடியில் அதிரடி ஆய்வில் இறங்கிய முதலமைச்சர்.. மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் சென்னை மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் நகரில் கனமழையால் ஏற்பட்டுள்ள சேதங்களையும், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்து, வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், பிரையண்ட் நகரில் தேங்கியிருந்த மழைநீரில் நீண்டதூரம் நடந்தே சென்று பாதிப்புகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அம்பேத்கர் நகர் மற்றும் ரஹ்மத் நகர் ஆகிய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்து, வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அப்பகுதி மக்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள் முதலமைச்சர் அவர்களே நேரடியாக வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடுவது தங்களுக்கு மனநிறைவை அளிப்பதாகவும், தமிழகத்தில் சிறப்பான முறையில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்கள்.
பின்னர், எட்டையபுரம் மதுரை சாலையில் உள்ள ஏ.வி.எம். மஹாலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 நபர்களுக்கு ரூ.42.60 இலட்சம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருட்கள், பெட்ஷீட், பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிவாரண உதவிகளாக வழங்கினார்.
முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்திடவும், மாவட்டத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிட ஒருங்கிணைந்த திட்டத்தை தயாரிக்கவும், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உடனடி நடவடிக்கை எடுத்திடவும், பழுதடைந்த மின்கம்பங்களை சீர்செய்து, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், தரைப்பாலங்களை மறுசீரமைத்து, மேம்பாலங்களாக அமைத்திடவும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை தங்குதடையில்லாமல் வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை அளவு 398.12 மி.மீ. ஆகும். இது வழக்கமாக பெய்யும் மழை அளவைவிட 112 விழுக்காடு அதிகமாகும்.
கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் 41 வீடுகள் முழுமையாகவும், 532 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்தன. வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு ரூ.25,04,900/- நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 28 கால்நடைகள் இழப்பிற்கு ரூ.3,38,000/- நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 387 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரானது, 422 மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் 355 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரானது 390 மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகளில் மாநகராட்சிப் பணியாளர்களுடன் இணைந்து வருவாய்த் துறையிலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 8 துணை ஆட்சியர்கள் மற்றும் 8 வட்டாட்சியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையிலிருந்து கூடுதல் ஆட்சியர் தலைமையில் 4 ஊரக வளர்ச்சி அலுவலர்கள், 4 துணை கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆகியோருடன் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 87 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அதில் தற்போது 34 நிவாரண முகாம்களில் 2,184 நபர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!