Tamilnadu

"எச்சரிக்கைகளை கவனமாகக் கடைபிடித்தால், ஒமிக்ரானை விரட்டலாம்" : கி.வீரமணி அறிக்கை!

கொரோனாவைத் தொடர்ந்து ‘’ஒமிக்ரான்’’ வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வந்துள்ள நிலையில், பொதுமக்கள் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள எளிய பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“கொரோனா கொடுந்தொற்று - கோவிட் 19 குறைந்துவரும் நிலையில், புதிதாக தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மிகவும் கவனத்துடனும், தடுப்பு எச்சரிக்கையுடனும் நாம் அனைவரும் செயல்படவேண்டிய தருணம் இது!

பயப்படுவதனாலோ, கவலைப்பட்டு முடங்குவதாலோ எந்தப் பிரச்சினைக்கும் எப்போதும் தீர்வு கிட்டுவதில்லை.

‘ஒமிக்ரான்’ -நாம் பின்பற்ற வேண்டியது என்ன?

அறிவுப்பூர்வமாக - அறிவியல் அணுகுமுறையோடு ஆராய்ந்து, அதற்கேற்ப நடந்து நாம் அனைவரும் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதோடு, அதன்மூலம் பிறருக்கும் தொல்லை - தொந்தரவு - தொற்று ஏற்படாமல் தடுக்கவுமான வாழ்க்கை வாழ முடிவு செய்வோம்.

மருத்துவ இயல், அறிவியல் நிச்சயம் அதன் பங்களிப்பைச் செய்தாலும், மனிதர்களாகிய நாம் குறைந்தபட்ச எளிய வழிகளை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தவறக்கூடாது.

1. அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவுதல்

2. தவறாது முகக்கவசம் அணிந்துகொள்ளல்.

(ஒளிப்படத்திற்காக முகக்கவசத்தைக் கழற்றுவதோ, மூக்குக்கு கீழே அணிந்து உரையாடுவதோ தவிர்க்கப்படுதல் கட்டாயம்)

3. தனிநபர் இடைவெளியைத் தவறாமல் பின்பற்றுதல்மூலம், ‘ஒமிக்ரானை’ எதிர்கொண்டு தவிர்க்கலாம்.

4. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இனியும் தாமதிக்காமல் போட்டுக் கொள்ளுதல்.

ஜெனீவாவில் உள்ள, உலக சுகாதார அமைப்பு நேற்று (29.11.2021) வெளியிட்டுள்ள தொழில்நுட்பக் குறிப்பு ஒன்றினை நாம் அலட்சியப்படுத்தாமல், கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

‘ஒமிக்ரான்’ வைரசின் தன்மை எத்தகையது?

‘‘புதிய ஒமிக்ரான் வைரஸ் உலக அளவில் மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஒமிக்ரான் வைரசால் மற்றொரு கரோனா பரவல் ஏற்படுமானால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கலாம்.

இந்த வகை வைரஸ் எவ்வளவு விரைவாகப் பரவும், எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. இந்த வகை வைரசால் உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவும் தன்மை, தீவிரத்தன்மை, இதற்கான தடுப்பூசி, பரிசோதனை மற்றும் சிகிச்சைகளில் தேவைப்படும் மாற்றங்கள் பற்றியெல்லாம் கண்டறிய பல வாரங்கள் ஆகலாம்.

‘ஒமிக்ரான்’ வைரஸ் தொற்றின் அறிகுறிகள்

‘ஒமிக்ரான்’ வைரஸ் இதுவரை 13 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிற இடங்களிலிருந்து வந்த பயணிகள் ஆவார்கள்.

முன் அறிகுறிகள், காரணம் போன்றவை எவையும் இல்லாமலே இருக்கக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இருமல் இல்லாமலேயே, ஜூரம் (காய்ச்சல்) இன்றியே, பசியின்மை, கோவிட் நிமோனியா, மூட்டுகளில் வலி போன்றவை சில அறிகுறிகளாம்.

நேரிடையாக நுரையீரலை (Lungs) தாக்கும் வன்மை இந்த ஒமிக்ரான் வைரசுக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.

மரபணு பரிசோதனை போன்றவைகள்கூட (Genome) தேவைப்படலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.’’

நமது அரசு மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருவது நம்பிக்கையூட்டுவதாகும்.

தமிழ்நாடு அரசின் முன்கூட்டிய செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் தொற்று ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமது தலைமைச் செயலாளர் உடனடியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளிடமும் பேசி ஆவன செய்ய முனைந்துள்ளார் - வினைத்திட்பம், விரைவு எல்லாம் அதில் அடங்கும்.

நமது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும், செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் அவர்களும், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க - இதில் போதிய கவனஞ்செலுத்தி, வருமுன் காக்கும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்!

நம் நாட்டு விமான நிலையங்களில் போதிய பரிசோதனை - முடிவு தெரிந்த பிறகே பன்னாட்டுப் பயணிகளை உள்ளே அனுமதிப்பது போன்ற கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இவை எல்லாவற்றையும்விட, ஒவ்வொரு தனிநபரும் குறைந்தபட்ச எளிய வழிகளான முகக்கவசம், தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ளல், அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவுதல், தனி நபர் இடைவெளி, கூட்டமாக நெருக்கி அடித்துச் சேராமல் இடைவெளியோடு பழகுதல் மற்றும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குதல் போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவசர அவசியம்!

எதையும் வெல்லலாம் என்ற உறுதியுடன் நடந்துகொள்க!

நவீன உலகில் புதிய நோய்கள் வந்தாலும், மனந்தளராமல், ‘வியாகூலம்‘ அடையாமல் துணிவுடன் - எச்சரிக்கைகளை கவனமாகக் கடைப்பிடித்தால், எதையும் வெல்லலாம் என்ற உறுதியுடன் நாம் நம் வாழ்க்கையை மேற்கொள்வோமாக!

அச்சம் வேண்டாம் - பொறுப்புடன் கூடிய கவனம் தேவை!”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ஒமிக்ரான் பாதிப்பு: RTPCR சோதனை கட்டாயம்.. 7 நாள் தனிமை - நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!