Tamilnadu

“ரயிலின் ‘சிப்’பை எடுத்தது இவர்தான்.. வீடியோ ஆதாரம் இருக்கு” : குற்றச்சாட்டுக்கு வனத்துறையின மறுப்பு!

கோவையில் ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவத்தில், ரயிலின் வேகத்தை கணக்கிடும் 'சிப்'பை எடுத்தது என்ஜின் டிரைவர்கள்தான் என்றும், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் தமிழக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மதுக்கரை அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 25 வயது பெண் யானை, 6 வயது குட்டி யானை, 18 வயது மக்னா யானை ஆகிய மூன்று யானைகளும் மங்களூரூ-சென்னை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தன.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலிஸார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரயில் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகியோரைப் பிடித்து தமிழக வனத்துறையின் விசாரித்தனர்.

அந்த இடத்தில் ரயில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வந்ததா என ரயில் என்ஜினில் இருந்து எடுக்கப்பட்ட 'சிப்' மூலமாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் ரயிலின் வேகம் குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் பெறச் சென்ற வனத்துறையினரை சிறைபிடித்த ரயில்வே அதிகாரிகள், தங்கள் ஊழியர்களை விடுவிக்கவில்லை என்றால் என்ஜின் 'சிப்'பை அத்துமீறி எடுத்ததாக வழக்குப்பதிவு செய்வோம் என தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழக வனத்துறையினர் விடுவிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கோழிக்கோட்டை சேர்ந்த என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மீது தமிழக வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள தமிழக வனத்துறையினர், “விபத்தை ஏற்படுத்திய என்ஜினில் இருந்து வேகத்தை கணக்கிடும் 'சிப்'பை வனத்துறையினர் யாரும் அத்துமீறி எடுக்கவில்லை. ரயில் இன்ஜினை இயக்கிய நபரேதான் 'சிப்'பை எடுத்துக் கொடுத்தார். அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது.

இந்த சிப் மூலம் குறிப்பிட்ட பகுதியில் ரயில் எத்தனை கி.மீ வேகத்தில் சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியும். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: சேற்றில் சிக்கி இறந்த குட்டி யானை.. 48 மணி நேரமாக தாய் யானை உட்பட 3 யானைகள் நடத்திவரும் பாசப்போராட்டம்!