Tamilnadu
ஆன்லைன் கேம் விளையாட அனுமதிக்காத பெற்றோர்; ரூ.33 லட்சம் & 213 சவரன் நகையை அலேக்காக சுருட்டிய சிறுவன்!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார். இவர் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி அரசு கல்லூரி பேராசிரியர்.
இவர்களது 15 வயது மகன் நாகேந்திரன் நாராயணன் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்த மாணவன் எந்நேரமும் ஃபயர் கேம் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்ததால் இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவன் கடந்த 17ஆம் தேதி இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வீட்டை சோதனையிட்ட போது பீரோவில் இருந்த 33 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 213 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் இருதயம் மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பராங்வின் டேனி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாணவன் செல்போன் நம்பர் வைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் டவர் லொகேஷன் மூலம் சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் மாணவன் இருப்பதாக சிக்னல் காட்டியுள்ளது. இதனிடையே மாணவன் தாம்பரம் அருகேயுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகையை அடகு வைத்து பணம் கேட்டுள்ளான். சந்தேகம் அடைந்த ஊழியர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற வண்ணாரப்பேட்டை போலீசார் மாணவனை மீட்டு பணம் மற்றும் நகையை கைப்பற்றி காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ஆன்லைன் பையர் கேம் விளையாட பெற்றோர் அனுமதி மறுத்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துச் சென்றதாகவும் நகையை தாம்பரத்தில் உள்ள நிறுவனத்தில் அடகு வைக்க முயற்சித்து பணத்திற்காக காத்திருந்ததாகவும் 44 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நேபாளம் செல்வதற்காக இன்று காலை விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவனை மனநல ஆலோசனிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சிறுவனுக்கு அறிவுரை கூறி எச்சரிக்கை செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!