Tamilnadu

"இது ஒரு வேளைக்கு கூட பத்தாதே.. இதுக்கா வெயில்ல மண்டைகாய நிக்க வச்சீங்க” : பா.ஜ.கவால் நொந்துபோன மக்கள்!

“150 மி.லி பால் பாக்கெட், பிரட் பாக்கெட்டுக்காக இவ்வளவு நேரம் வெயில்ல நிற்க வைக்குறீங்களே...’ குஷ்பூவிடம் பெண்கள் புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் பெய்த கனமழையால், சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தி.மு.க அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆய்வு, உடனடி நிவாரணப் பணிகளாலும் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாகக் கூறி பா.ஜ.கவினர் அசிங்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை படகில் வந்து போட்டோஷூட் நடத்தியது கடும் கேலிக்கு உள்ளானது.

இந்நிலையில், நிவாரணம் வழங்குவதற்காக வந்த பா.ஜ.க நிர்வாகி குஷ்பூ நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்து பா.ஜ.கவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதாக பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்திருந்தனர். 10 மணியளவில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே அங்கு வந்து பெண்கள் காத்திருந்தனர்.

ஆனால், குஷ்பூ வர தாமதமான நிலையில் வெயில் அதிகரித்ததால், பொறுமையை இழந்த பெண்கள் பா.ஜ.கவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் நீங்கள் கொடுக்கும் நிவாரணமே வேண்டாம் எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பின்னர், தாமதமாக 10.45 மணியளவில் வந்த குஷ்பூ நிவாரணமாக 150 மி.லி பால் பாக்கெட், ஒரு பிரட் பாக்கெட் வழங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், மளிகைச் சாமான்கள், உணவுப் பொருட்கள் வழங்குவதாகக் கூறி வரவழைத்துவிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்பியபடி கலைந்து சென்றனர்.

பெண்மணி ஒருவர் குஷ்பூவிடமே, 5 கிலோ அரிசி கொடுத்திருந்தால் கூட பிரயோஜனமாக இருந்திருக்கும். நீங்கள் கொடுத்திருக்கும் பிரெட் மற்றும் பால் ஒரு வேளைக்குக் கூட போதாது என வேதனையோடு தெரிவித்தார்.

நிவாரணம் வழங்குவதாகக் கூறி பேரிடர் நேரத்தில் அரசியல் செய்ய முயன்ற பா.ஜ.கவினர் பொதுமக்களிடையே அசிங்கப்பட்டு வருவது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

Also Read: “வீடியோ எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க?”: அண்ணாமலையை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்- ட்ரெண்டாகும் #GoatonBoat