Tamilnadu

விற்பனைக்கு வந்தது ‘வலிமை’ சிமெண்ட்... தரமிக்க புதிய ரகத்தினை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக சிமெண்ட் "வலிமை" சிமெண்ட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.11.2021) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர ரக சிமெண்ட் "வலிமை"யை அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆண்டொன்றுக்கு 2 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால், அரியலூரில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன் ஒரு ஆலையும், 10 இலட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலையும் நிறுவப்பட்டது. இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டொன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் "அரசு" என்ற பெயரில் சிமெண்டை விற்பனை செய்து வருகிறது.

2021-22ஆம் ஆண்டு தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது, “வலிமை” என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஓர் அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர "வலிமை" சிமெண்ட் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ரக "வலிமை" சிமெண்ட், அதிக உறுதியும் (Greater Compression Strength), விரைவான உலரும் தன்மையும் (Quick Setting), அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் (Heat Resistant) கொண்டது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் மேஷ்ராம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Also Read: உலகே திரும்பி பார்க்கும் வகையில் ஆட்சி செய்யும் மு.க.ஸ்டாலின் : இவரோட Man of Power என்னவென்று சொல்வது?